போதைப்பொருள் இல்லாத இளைஞர் சமுதாயம் அவசியம்!
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது, இந்திய இளைஞர்களின் திறமைகள் இன்று உலகம் முழுவதும் பேசப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இளைஞர்கள் பெரிய கனவுகளைக் கண்டு, அவற்றை நனவாக்க கடுமையாக உழைத்து வருவதாகத் தெரிவித்தார். அதே நேரத்தில், போதைப்பொருள் பழக்கம் இளைஞர்களின் லட்சியங்களுக்கும் எதிர்காலத்திற்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாக கவலை தெரிவித்தார்.
தற்போது போதைப்பொருள் ஒழிப்புக்கான ‘போதைப்பொருள் இல்லாத இளைஞர் இயக்கம்’ (Nasha Mukt Yuva Abhiyan) தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி, பின்னர் மன உறுதியால் அதிலிருந்து மீண்ட இளைஞர்களையும் பிரதமர் பாராட்டினார். தங்களுக்குள்ளேயே போராடி வாழ்க்கையைப் புதிய பாதைக்கு மாற்றிய அவர்களின் அனுபவங்கள் மற்ற இளைஞர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் என்றார். “நமது குடும்பங்களுக்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும் இளைய தலைமுறையினர் போதைப்பொருள் பழக்கமின்றி இருப்பது மிகவும் அவசியம்” என வலியுறுத்தினார்.
தொலைந்த 14 லட்சம் செல்போன்கள் மீட்பு!
தொடர்ந்து, செல்போன்கள் தொலைந்து போவதால் ஏற்படும் சிரமங்கள் குறித்துப் பேசிய பிரதமர், மத்திய அரசின் ‘சஞ்சார் சாத்தி’ (Sanchar Saathi) டிஜிட்டல் தளம் மூலம் தொலைந்த செல்போன்களை மீட்க முடியும் எனத் தெரிவித்தார். இந்த இணையதளத்தை இதுவரை 30 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளதாகவும், அதன் செயலியை சுமார் 3 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். செல்போன்களின் தனித்துவமான IMEI எண்ணைப் பயன்படுத்தி அவற்றைக் கண்டறியும் இந்தத் திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் இதுவரை 14 லட்சத்திற்கும் அதிகமான தொலைந்த செல்போன்கள் மீட்கப்பட்டு உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
உலகின் சிறந்த அருங்காட்சியகப் பட்டியலில் பீகார் மியூசியம்!
இந்திய அருங்காட்சியகங்களின் சாதனைகள் குறித்துப் பேசிய பிரதமர், பாட்னாவில் உள்ள பீகார் அருங்காட்சியகம் உலகின் சிறந்த 100 அருங்காட்சியகங்களின் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்துள்ளதாகக் கூறினார். மேலும், ஆசிய அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். பாரீஸில் உள்ள புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகம், நியூயார்க்கில் உள்ள மெட்ரோபாலிட்டன் அருங்காட்சியகம் ஆகியவற்றைவிடவும் இந்தப் பட்டியலில் பீகார் அருங்காட்சியகம் முன்னிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
உலகச் சந்தையில் தடம் பதிக்கும் இந்திய சாக்லேட்!
இந்திய சாக்லேட் தயாரிப்புகளும் சர்வதேச அளவில் தனி அடையாளத்தை உருவாக்கி வருவதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். கடந்த ஆண்டில் சாக்லேட் மற்றும் கோகோ சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இத்துறையில் புதிய தொழில் நிறுவனங்கள் உள்ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி புதுமையான சுவைகளில் சாக்லேட்களைத் தயாரித்து வருவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, குஜராத்தின் கட்ச் பகுதியில் ஒட்டகப் பால் மூலம் சாக்லேட் தயாரிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினார். அமுல் நிறுவனம் உள்ளூர் ஒட்டகப் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்து சாக்லேட், குங்குமப்பூ சுவை கொண்ட பால் மற்றும் ராஜ்போக் ஐஸ்கிரீம் தயாரிப்பதாகவும் கூறினார். அதேபோல், சூரத்தைச் சேர்ந்த ‘ஷ்மிட்டன்’ (Schmitten) சாக்லேட் நிறுவனமும் இந்தியாவில் தயாரிக்கப்படும் உயர்தர சாக்லேட்டுகளுக்கு உலகளவில் அடையாளத்தை ஏற்படுத்தி வருவதாகப் பாராட்டினார்.
உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்!
நாடு முழுவதும் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது உடல்நலத்திலும் உடற்பயிற்சியிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார். ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தை முழு உற்சாகத்துடன் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும், உணவில் எண்ணெயின் பயன்பாட்டை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என்ற தனது அறிவுரையைப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஓவியர் சோபா சிங்கின் 125-வது பிறந்தநாள்!
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற குருநானக் தேவ் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று, ஷபத் கீர்த்தனையில் கலந்துகொண்ட அனுபவத்தையும் பிரதமர் பகிர்ந்துகொண்டார். சீக்கிய குருமார்களின் உருவப்படங்கள் தனக்குள் மிகுந்த மரியாதையையும் பக்தியையும் ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், புகழ்பெற்ற ஓவியர் சோபா சிங்கின் கலைப்பணிகளையும் நினைவுகூர்ந்தார். சீக்கிய குருமார்களின் பல புகழ்பெற்ற ஓவியங்களை வரைந்த சோபா சிங்கின் 125-வது பிறந்தநாள் நவம்பர் 29-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அவர் பல ஆண்டுகள் ராணுவத்தில் வரைவு ஓவியராகப் பணியாற்றியதுடன், பாக்தாத்திலும் பணியாற்றியதாக பிரதமர் தெரிவித்தார். அவரது 125-வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவு நாணயம் வெளியிடப்பட்டது சீக்கிய சமூகத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.




