திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, பக்தர்களின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சென்னை, திருச்செந்தூர், திருநெல்வேலி, தாம்பரம் இடையே 4 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 14-ஆம் தேதி மாலை 4.10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06007), மறுநாள் அதிகாலை 4 மணிக்கு திருச்செந்தூரைச் சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக இயக்கப்படுகிறது.
மறுமார்க்கத்தில், திருச்செந்தூரில் இருந்து நவம்பர் 15-ஆம் தேதி இரவு 10.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06008), மறுநாள் நண்பகல் 12 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும். இந்த ரயில் திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக இயக்கப்படும்.
மேலும், திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 15-ஆம் தேதி இரவு 11 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06010), மறுநாள் காலை 9.55 மணிக்கு தாம்பரத்தைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து நவம்பர் 16-ஆம் தேதி நண்பகல் 12.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06009), அதே நாள் இரவு 11.40 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும். இந்த இரு ரயில்களும் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரயில்களில் குளிர்சாதன இரண்டடுக்கு, மூன்றடுக்கு, மூன்றடுக்கு பொருளாதார வகுப்பு, படுக்கை வசதி மற்றும் பொதுப்பெட்டிகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. சென்னை எழும்பூர் – திருச்செந்தூர் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நவம்பர் 13-ஆம் தேதி மாலை 6 மணிக்கும், மற்ற மூன்று சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நவம்பர் 14-ஆம் தேதி காலை 8 மணிக்கும் தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.




