தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற் பகுதியில்
இன்று மாலை உருவாக உள்ள புயலுக்கு மோக்கா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில்
கடந்த 8-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது படிப்படியாக
வலுப்பெற்று தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இது இன்று மாலை புயலாக வலுப்பெறவுள்ளது .அந்த புயலுக்கு ஏமன் நாடு ‘மோக்கா’ என்ற பெயர் சூட்டியுள்ளது.
மோக்கா என்றால் ஏமன் நாட்டில் உள்ள துறைமுக நகரத்தின் பெயர் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே மே 14 முன்மதியம் மோக்கா புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளது.
வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய கடலோரப் பகுதியில் புயல்கள் உருவாகும் காலம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஜூன் 1 முதல் டிசம்பர் 31 வரை பருவமழை காலமாகவும், இதர மாதங்கள் பருவமழைக்கு
முந்தைய காலமாகவும் கணக்கிடப்படுகிறது.
பருவமழை காலத்தில் மட்டும் புயல் உருவாகவில்லை என்றும், பருவமழைக்கு முந்தைய காலமான மே மாதத்திலும் அதிக அளவில் புயல்கள் உருவாகி உள்ளன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மே மாதங்களில் அதிக அளவில் புயல்கள் உருவாகி இருப்பதாகவும், கடந்த 2020 ஆம் ஆண்டில் ஆம்பன், 2021 இல் யாஸ், 2022-ல் அசானி ஆகிய புயல்கள் உருவான, நிலையில் இந்த ஆண்டும் மே மாதத்தில் மோக்கா புயல் உருவாக உள்ளது.
தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மே மாதங்களில் புயல் உருவாவது, 1992 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் என்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம். கடந்த 1891 ஆம் ஆண்டு முதல் நாட்டின் வானிலை தரவுகளை வானிலை ஆய்வு மையம் பதிவு செய்து பாதுகாத்து வருகிறது.
அதன் அடிப்படையில், தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் கடந்த 132
ஆண்டுகளில் மொத்தம் 530 புயல்கள், தீவிர புயல்கள் உருவாகி உள்ளன. அதிகபட்சமாக நவம்பரில் 124 புயலும், அக்டோபரில் 93 புயல்களும், மே மாதங்களில் 65 புயல்கள் உருவாகி உள்ளன. கோடை காலம் என்றால் கடும் வெயில் வாட்டி வதைக்கும் என்ற நிலை இருந்து வரும் நிலையில் புயலும் வரும் என்று மீண்டும் நிரூபித்துள்ளது இந்த மோக்கா புயல்.







