தென்னாப்பிரிக்காவின் ஸூலு அரச அரண்மனையில் பாரம்பரிய முறைப்படி புதிய மன்னர் முடிசூட்டிக்கொண்டார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நுகுனி சமூகத்தில் இருந்து தோன்றிய ஸூலு இனத்தவர்கள் தென்னாப்பிரிக்காவின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கை கொண்டுள்ளனர். இவர்கள், குவாசுலு-நடால் மாகாணத்தில் அதிகளவில் வசித்து வருகின்றனர். பணக்கார மற்றும் பாரம்பரிய முடியாட்சி நடத்தி வந்த ஸூலு மன்னர் குட்வில் ஸ்வெலிதினி, கடந்த மார்ச் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
புதிய மன்னரை தேர்ந்தெடுக்க பாரம்பரிய அரச குடும்பத்தில் பிரச்னை வெடித்த நிலையில், கடும் போட்டிக்கு இடையே அவரது மகன் மிசுசுலு ஸூலு புதிய மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 50 ஆண்டுகளுக்கு பிறகு புதிய மன்னர் பதவியேற்கும் நிகழ்ச்சி, ஸூலு அரச அரண்மனையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. அப்போது, நோங்கோமா பகுதியில் இருந்து ஸூலு அரச அரண்மனைக்கு மிசுசுலு ஸூலு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்.
விலங்குகளின் தோல்களை உடையாக அணிந்து வந்த புதிய மன்னருக்கு ஈட்டி, கேடயங்கள் போன்ற ஆயுதங்களை ஏந்தி வீரர்கள் பாதுகாப்பு கவசமாக அவரை அரச அரண்மனைக்கு அழைத்து சென்றனர். அப்போது பெண்களும் பாரம்பரிய உடையணிந்து நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர், அரண்மனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மிசுசுலு ஸூலு புதிய மன்னராக பதவியேற்று கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அரசு குடும்பத்தினர் உள்ளிட்டோர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்







