மறைந்த கேரளா முன்ளாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் உடலுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி தொண்டை புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அவர் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனைத்தொடர்ந்து பெங்களூரூ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.30 மணி அளவில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கேரள முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டிக்கு சிறந்த அரசியல்வாதி மற்றும் உண்மையான மக்கள் தலைவர். பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரது குடும்பத்தினருக்கும், கேரள மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
உம்மன் சாண்டியின் உடல் பெங்களூரூவில் உள்ள அமைச்சர் ஜானில் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.





