மாமன்னன் திரைப்படம் வரும் 27-ம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அந்நிறுவனம் ட்விட்டரில் அறிவித்து போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
மாமன்னன் படத்தை வெளியிடுவதற்கு முன் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அதே அளவிற்கு சர்ச்சைகளும் இருந்து வந்தது. மேலும் தேனி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் படம் வெளியான பிறகும் படத்தை வெளியிட கூடாது என்றும் அப்படி வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என போராட்டங்கள் நடந்தன.ஆனால் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி மாமன்னன் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தைப் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பா. ரஞ்சித் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களும் பாராட்டினர். அண்மையில் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பு திரையிடல் திரையிடப்பட்ட நிலையில் படத்தை பார்த்து ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்திருந்தனர்.
மேலும் இப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.10 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்ததாக கூறப்பட்டது. மேலும் இந்தியா முழுவதும் ரூ.40 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது. தமிழில் மாமன்னன் வெற்றியைத் தொடர்ந்து, இப்படம் தெலுங்கு மொழியில் ‘நாயகுடு’ என்ற பெயரில் கடந்த ஜூலை 14ஆம் தேதி அன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 27ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் ட்விட்டரில் அறிவித்து போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளது.
https://twitter.com/Netflix_INSouth/status/1681174458126458882?s=20
- பி.ஜேம்ஸ் லிசா








