முக்கியச் செய்திகள் தமிழகம்

“எல்.முருகனை மத்திய அமைச்சராக்கியது சமூக நீதி” – அண்ணாமலை

மக்கள் ஆசி யாத்திரை ‘என பாஜக தமிழ்நாட்டில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சொந்த ஊரில் இன்று நடைபெற்ற யாத்திரையில் நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாக செம்மல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் நடத்திய நேர்காணல்;

மக்கள் ஆசி யாத்திரையின் மூன்றாவது நாளில் இன்று நாமக்கல் கோனூரில் மக்களை சந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு தூரம் இலக்கினை அடைந்திருக்கிறீர்கள்?

“பாரத பிரதமரின் நலத்திட்டங்களின் மூலம் நிறைய பயனாளிகள் உருவாகியிருக்கிறார்கள். தமிழகத்தின் எல். முருகன் உட்பட 43 அமைச்சர்கள் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெற வேண்டும். இதன் மூலம் அமைச்சர்களின் பணி சிறப்பதற்கு இது ஊக்கமாக அமையும். முதல் நாள் கோவையில் தொடங்கி, இரண்டாவதாக தாராபுரம், நாமக்கல் முடித்து தற்போது எல்.முருகனின் சொந்த ஊரான கோனூரில் உள்ளோம். மக்கள் கோனூருக்கு வந்து பார்த்தால் யாத்திரையின் முழு நோக்கம் தெரியும். ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்து, பாட்டனார் செருப்பு தைக்கும் தொழிலை செய்து, தந்தையார் விவசாயம் செய்த குடும்ப பின்னணியிலிருந்து ஒரு மனிதனை கண்டெடுத்து அவரை மேலே கொண்டு வந்து, கட்சியில் பெரும் பொறுப்புக்களை கொடுத்து மத்திய இணையமைச்சராக பாஜக உருவாக்கியுள்ளது. இந்த ஊர் மக்களின் ஆதரவையும் பாசத்தையும் பார்க்கும் போது நமக்கே நெகிழ்ச்சியாக உள்ளது. எல்.முருகனின் சொந்த வீட்டிற்கு சென்று அவரின் தாய், தந்தையாருடன் காலை உணவை சாப்பிட்டோம். பழைய நினைவுகளை அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள். இந்த யாத்திரையின் நோக்கமும் இதுதான். எல்.முருகனுக்கு கொடுக்கப்படுகின்ற ஆதரவானது பிரதமர் மோடிக்கு கொடுக்கப்படுகின்ற ஆதரவாகும். எங்களை பொறுத்த அளவில் இது ஒரு வெற்றி யாத்திரையாக அமைந்துள்ளது. அடுத்தடுத்து நடக்கவிருக்கும் பணிகளுக்கு இது உத்வேகமாக இருக்கும் என்கிற நம்பிக்கையுள்ளது.”

இப்பகுதியினை கடந்து பல்வேறு பகுதிகளிலும் யாத்திரையை மேற்கொண்டுள்ளீர்கள். யாத்திரைக்கு மக்களின் வரவேற்பு எப்படி இருக்கின்றது?

“மக்கள் ஆசி யாத்திரையில் அதிகமாக பங்கேற்றது பாஜக அல்லாத பலர்தான். நேற்று தாராபுரத்தில் நடைபெற்ற யாத்திரை நிகழ்வில் நமது கட்சியைக் கடந்து பலர், கூட்டணிக் கட்சியினர் என பெரும்பாலானோர் ஆதரவை தெரிவித்தனர். யாவற்றையும் கடந்து, எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பொறுப்பை கொடுத்தது சமூக நீதி நிகழ்வாக சாதாரண மனிதனின் நெஞ்சை தொட்டுவிட்டது. இதனால் கட்சியை கடந்து சாதாரண மக்களிடத்தில் இந்த யாத்திரை சென்றடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக யாத்திரையாகவே சென்றுகொண்டிருக்கிறது என பல கட்சியினர் கேள்வியெழுப்புகின்றனர். ஆனால் இது வெறும் யாத்திரை அல்ல. இது மக்கள் சந்திப்பு நிகழ்வு. மக்களுடன் கலந்து அரசியல் செய்வது.”

யாத்திரை என்பது தமிழ்ச் சூழலுக்கு புதியது. இதுதான் பாஜகவின் அரசியல் யுக்தி என்று புரிந்துகொள்ளலாமா?

“பாஜக மேடைகளில் தனது சித்தாந்தத்தை பரப்புகிறது. பயனாளர்களை நேரடியாக சந்திக்கின்றது. வீடு வீடாக சென்று மக்களை கட்சி சந்திக்கின்றது. இதன் ஒரு பகுதியாகத்தான் இந்த யாத்திரையும் அமைந்துள்ளது. மூன்று அல்லது நான்கு நாள் பயணத்தை நாம் யாத்திரையாக வரையறுத்துள்ளோம். இவ்வாறாக செய்வதன் மூலம் மக்களிடத்தில் கட்சியின் நம்பிக்கை வலுப்பெறுகிறது. இதை இதர கட்சிகள் செய்வதில்லை. பொதுக்கூட்டங்களுடன் கட்சிகள் முடித்துக்கொள்கின்றன. இதன் காரணமாக பாஜகவின் அரசியல் வித்தியாசமாக தெரிகின்றது.”

 

பொதுவாக அரசியல்வாதிகள் மக்களை சந்திக்கும்போது அவர்களிடத்தில் மக்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்கின்றனர். மத்திய அரசை தலைமையேற்று நடத்தக்கூடிய கட்சியின் பிரதிநிதியாக நீங்கள் மக்களை சந்திக்கும் போது மாநிலத்தின் பிரச்னை சார்ந்தும் உங்களிடத்தில் கோரிக்கைகளை கொடுக்கிறார்களா?

“மனுக்கள் அதிக அளவில் வருகின்றன. பெறப்படக்கூடிய மனுக்களை கோரிக்கைகளின் அடிப்படையில் பிரித்து மாநிலத்தின் பிரச்னை சார்ந்த மனுக்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடத்திலும், மத்திய அரசு சார்ந்த கோரிக்கைகளை அமைச்சர்களிடத்திலும் பிரித்து கொடுக்கப்படுகின்றன. தற்போது எல்.முருகன் அமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து மத்திய அரசுக்கான கோரிக்கைகள் அதிகரித்திருக்கின்றன. உதவிகள், நலத் திட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் வருகின்றன. இதை முறைப்படுத்த தனி நிர்வாகம் அமைக்கப்படுகிறது. நேற்றுவரை இந்த யாத்திரையில் ஆயிரக்கணக்கான மனுக்கள் வந்திருக்கின்றன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்திடுவதே எங்கள் நோக்கமாகும்.”

இதற்கு முன்னர் பிரச்சாரத்திற்கு அதிகமான முறை சென்றிருப்பீர்கள், தற்போது பொறுப்பேற்றதையடுத்து நீங்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது எழக்கூடிய கோரிக்கைகளை எவ்வாறு கையாளுகிறீர்கள்?

“கோரிக்கைகளை மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியவுடன் கோரிக்கைகள் அதிகரிக்கின்றன. மக்கள் நம்பிக்கை வைக்கின்றனர். டெல்லியில் எங்கோ அமர்ந்துகொண்டு கோரிக்கையை கேட்டுகொள்ளமல், மக்களை நேரிடையாக சந்திக்கிறார்கள் என்கிற நம்பிக்கை மக்களுக்கு அதிகரிக்கின்றது. கொங்குப் பகுதியில் இந்த யாத்திரை தொடங்கியிருந்தாலும், அடுத்ததாக கடலோர பகுதிகள், தென் பகுதிகள் என யாத்திரை நீ்ளும். மக்களுக்கும் அரசுக்கும் இடைவெளி கூடாது என்பதே இந்த யாத்திரையின் நோக்கம். தற்போது நடப்பது ஆசி வேண்டி யாத்திரையாக இருக்கும். அடுத்து நடைபெறுவது மக்களை நேரிடையாக சந்திப்பதற்கான முயற்சியாக இருக்கும்.”

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் குறைந்த கொரோனா பாதிப்பு

Ezhilarasan

பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியது என்ன?

Halley karthi

உதயநிதி ஸ்டாலின் பேச்சு தமிழகத்தில் எடுபடாது: ஆர்.பி.உதயகுமார்!

Jayapriya