ஆஸ்திரேலியாவில், டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்தியா, இப்போது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராரா ஓவல் (Carrara Oval) மைதானத்தில் நேற்று (அக்.1) தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய பெண்கள் அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனாவும் ஷபாலி வர்மாவும் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 93 ரன்னாக இருந்தபோது ஷபாலி வர்மா 31 ரன்னில்
ஆட்டமிழந்தார். ஸ்மிருதி மந்தனா 51 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார். 44.1 ஓவர்களில் இந்திய பெண்கள் அணி, 132 ரன்னில் இருந்த போது, மழையால் ஆட்டம் பாதிக்கபட்டது.ஸ்மிருதி மந்தனா 80 ரன்களுடனும், பூனம் ரவுத் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்த ஸ்மிருதி மந்தனா, 170 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை எடுத்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 216 பந்துகளில், 127 ரன்கள் குவித்து அஸ்லீக் கார்ட்னர் பந்துவீச்சில்
தஹிலா மெக்ராத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார். மேலும் வெளிநாடுகளில் சதமடித்த 5-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையையும், ஆஸ்திரேலியாவில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த
அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்கிற பெருமைகளையும் அவர் பெற்றுள்ளார்.
தேநீர் இடைவேளை வரை இந்திய பெண்கள் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்துள்ளது. தீப்தி சர்மா 12 ரன்களுடனும் தனியா பாடியா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.








