இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் பிறந்தநாள் இன்று…
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் ஸ்மிருதி மந்தனா, தனது 25-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால், இந்திய அணியை பலமுறை வெற்றிக்கோட்டிற்கு அழைத்துச்சென்ற இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
இந்திய மகளிர் அணி எந்த போட்டியில் விளையாடினாலும், சமூக வலைதளங்களில் இவரது பெயர் டிரெண்டிங்கில் இடம்பெற்றுவிடும். இந்நிலையில், இன்று 25-வது பிறந்தநாள் காணும் மந்தனாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
2013-ஆம் ஆண்டு தனது 16-வது வயதிலேயே ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்மிருதி மந்தனா, இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள், 59 ஒருநாள் மற்றும் 81 டி-20 போட்டிகளில் விளையாடி உள்ளார். தனது 22-வது வயதில் இந்திய மகளிர் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற அவர், மிக இளம்வயதில் கேப்டன் பதவி வகித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
2017-ல் உலகக்கோப்பை டி-20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா, இந்தியாவின் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல் 2018-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்த மந்தனா, ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை மற்றும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை ஆகிய இரு விருதுகளையும் வென்று அசத்தினார்.
2022 உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்றில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை மந்தனா தான். அதேபோல், அதிவேகமாக 1,000 ரன்களை எட்டிய 2-வது இந்திய வீராங்கனை என்ற சாதனையும் மந்தனா வசமே உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, இந்திய அணியின் வெற்றிகளுக்கு துணைபுரிந்த ஸ்மிருதி மந்தனா. முதல்முறையாக உலகக்கோப்பையை வெல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கனவை நிறைவேற்றுவார், என்பதே ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.











