ஹாங்காங்கைச் சேர்ந்த இன்ஃபினிக்ஸ் நிறுவனம் நோட் 12 சீரிஸ் என்ற புதிய ரக ஸ்மார்ட்போனை இன்று வெளியிடுகிறது. இதற்கு டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் பதிப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது.
மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ஸ்ட்ரேஞ்ச் படம் 2016ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் மற்றொரு பாகம் கூட சமீபத்தில் வெளியாகி திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. விஎஃப்எக்ஸ் அதிகம் நிறைந்திருக்கும் இந்தப் படத்துக்கு இந்தியாவில் ரசிகர்கள் மிகவும் அதிகம். அந்த வகையில் அந்தப் பெயரில் வெளியாக இருக்கும் இந்தப் போனும் சந்தையில் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான மார்வெல் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து இந்த நோட் 12 மற்றும் நோட் 12 டர்போ பதிப்பை வெளியிடுகிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் 2 ஹெட்செட்கள் இருக்கும். மீடியாடெக் சிப்செட்கள் பொருத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் 4ஜி இணைப்பை ஆதரிக்கும். இன்ஃபினிக்ஸ் நோட் 12 சீரிஸில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கும் என்று பார்க்கலாம். இன்ஃபினிக்ஸ் நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போனில் 6.7 அங்குல FHD+ AMOLED திரை இருக்கும் என்று அந்நிறுவனமே தெரிவித்துள்ளது. ஓடிடி தளங்களான நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் போன்றவற்றை ஆதரிக்கும் எல்1 வைடுவைன் தொழில்நுட்பம் ஆகியவை இருக்கும்.
4ஜிபி+64ஜிபி மற்றும் 6ஜிபி+128ஜிபி ஆகிய இரண்டு வசதிகளில் இன்ஃபினிக்ஸ் நோட் 12 கிடைக்கும். நோட் 12 டர்போ ஸ்மார்ட்போன் 8ஜிபி+128ஜிபி வசதியுடன் கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் செயல்படும். 5000 mAh பேட்டரியுடன் அதிகவேகமாக சார்ஜ் செய்யும் நுட்பமும் இணைக்கப்பட்டுள்ளது. கேமராவைப் பொருத்தவரை இன்ஃபினிக்ஸ் நோட் 12 மற்றும் நோட் 12 டர்போ ஆகிய இரண்டு 50 மெகா பிக்சல் பின்புற கேமரா, செல்பி எடுப்பதற்காக 16 மெகா பிக்சல் முன்புற கேமரா உள்ளது.
கருப்பு, நீலம், சில்வர் நிறத்தில் இந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு கிடைக்கும். ஆன்லைன் வணிக தளமான ஃபிளிப்கார்ட்டில் மட்டுமே இந்த வகை ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.







