எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாள் – வாழ்த்து தெரிவித்த ராகவா லாரன்ஸ்!

நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து அசத்தி…

நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து அசத்தி வருகிறார்.  கடந்த 1999 ஆம் ஆண்டு, நடிகர் அஜித்தை டபுள் ஆக்ஷனில் நடிக்க வைத்து, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய திரைப்படம் ‘வாலி’. இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாக மட்டுமின்றி, வசூல்ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

தொடர்ந்து குஷி, நியூ போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். பின்னர், அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, வியாபாரி, போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.  ஸ்பைடர் படத்தில் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா, மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து மிரள வைத்தார்.  மாநாடு படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

தற்போது ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் பொருந்தி நடிக்கும் ஆளுமையாக இருக்கும் எஸ்.ஜே.சூர்யா சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்திலும் நடித்திருந்தார். மேலும் இந்தியன் 3 திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.  இந்த நிலையில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா இன்று (ஜூலை 20) தனது 56வது பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் மாற்றம் என்ற அமைப்பை நிறுவி மக்களுக்கு உதவி செய்துவருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளதை தனது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறுகையில், “ எனது இனிய நண்பரும் சகோதருமான எஸ்.ஜே.சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு மிகவும் மிருதுவான மனம். என்னுடைய மாற்றம் பயணத்தில் இணைந்ததற்கு நன்றி. நீங்கள் இயக்கும், நடிக்கும் படங்கள் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள். உங்களுக்கு வெற்றியும் நல்ல உடல் நலத்தையும் தருமாறு ராகவேந்திரா சுவாமியை வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.