மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து பாராமதிக்கு சென்ற அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் தனி விமானம் புதன்கிழமை காலை தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. தரையில் மோதிய விமானம் தீப்பிடித்து எரிந்த நிலையில், விமானத்தில் பயணித்த அஜித் பவார் உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த சம்பவம் மாகராஷ்டிரா அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அஜித் பவாரின் மறைவையடுத்து இன்று முதல் ஜன.30ம் தேதி வரை துக்கம் அனுசரிக்கபடும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
யார் இந்த அஜித் பவார்……..?
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் அண்ணன் அனந்த்ராவ் பவாரின் மகன் தான் அஜித் பவார். புனே மாவட்டம் பாரமதி தாலுகாவில் உள்ள கட்டேவாடி கிராமத்தைச் சேர்ந்த அஜித் பவார் 1959 ஜூலை 22 அன்று பிறந்தார். 1982 ஆம் ஆண்டில் ஒரு கூட்டுறவு சர்க்கரை தொழிற்சாலை வாரியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அஜித் பவார் 1991 இல் புனே மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பதவியில் இவர் 16 ஆண்டுகள் பதவியில் நீடித்தார்.
1991 மக்களவை தேர்தலில் பாராமதி மக்களவைத் தொகுதியிலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அஜித் பவார் முதன்முதலில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பி. வி. நரசிம்ம ராவ் அரசாங்கம் பொறுப்பேற்றபோது, முதலமைச்சராக இருந்த சரத்பவார் அப்பதவியை விட்டு விலகி மத்திய பாதுகாப்பு அமைச்சராக விரும்பினார். இதனால் தனது சித்தப்பா சரத் பவார் மக்களவைக்கு போட்டியிட வசதியாக இவர் தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதன் பிறகு சரத்பவார் இராஜினாமா செய்த பாராமதி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். தொடர்ந்து 1995, 1999, 2004, 2009, 2014, 2019, 2024 என் தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்று பாராமதி சட்டமன்றத் தொகுதியை தக்க வைத்தார். நிதி, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் அமைச்சராக பதவி வகித்த அஜித் பவார், 6 முறை மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சராகவும் இருந்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கட்சியில் தனது மகள் சுப்ரியா சுலேவிற்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கினார். இதனால் அதிருப்திக்குள்ளான அஜித் பவார் தனக்கு உரிய அங்கீகாரம் இல்லை என குற்றம் சாட்டி கடந்த 2023ஆம் ஆண்டு கட்சியை உடைத்தார்.
இதனால் கட்சியானது சரத் பவார் அணி, அஜித் பவார் அணி என இரண்டாக பிளவுற்றது. தேர்தல் ஆணையமானது அஜித் பாவர் தலைமையிலான அணிக்கு கட்சியின் அதிகார்வபூர்வ சின்னத்தை வழங்கியது. தொடர்ந்து அஜித் பவார், பாஜக- சிவசேனாவின் மஹாயுதி கூட்டணியில் இணைந்து துணை முதலமைச்சரானார்.









