நாடாளுமன்றம் செல்ல வீட்டை விட்டு வெளியே வரும் போது, கீழே விழுந்த இருசக்கர வாகன ஓட்டியை பார்த்து, காரை நிறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தூக்கிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
மோடி சமூகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவரது எம்பி பதவி தகுதிநீக்கத்தை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது.
இதனால், 4 மாதங்களுக்கு பின்னர் முதல்முறையாக ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றம் சென்றார். காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ராகுல்காந்தியை வரவேற்று முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில் மக்களவையில் இரண்டாவது நாளாக இன்று நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை 11.45 மணியளவில் தனது வீட்டில் இருந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காரில் புறப்பட்டார். அப்போது வீட்டைவிட்டு வெளியே வந்த போது, நிலை தடுமாறி கீழே விழுந்த வாகன ஓட்டி ஒருவரை பார்த்து தனது காரை நிறுத்த சொன்னார் ராகுல் காந்தி. பின்னர் காரைவிட்டு இறங்கி வாகன ஓட்டியின் அருகில் சென்று அவரை தூக்கிவிட்டு நலம்விசாரித்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.







