முக்கியச் செய்திகள் சினிமா

குடும்பங்கள் கொண்டாடும் டான் திரைப்பட விமர்சனம்!

‘அவரு பிடிச்சுட்டாருங்கங்க.. குழந்தைங்களலாம் பிடிச்சிட்டாரு!’ என்று சில வருடங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் குறித்து விஜய் ஒரு மேடையில் பேசியிருந்தார். ஆனால் குழந்தைங்கள் மட்டுமில்லாமல் இன்றைக்கு மொத்த குடும்பத்தையுமே பிடித்துவிட்டார் சிவகார்த்திகேயன் என்று தான் சொல்ல வேண்டும். சமீப காலமாக ‘குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’ எனும் வார்த்தை நகைப்புக்குரிய பொருளில் உபயோகப்படுத்தப்பட்டு வரும் சூழலில் ஒரு தரமான குடும்பங்கள் கொண்டாடும் படத்தை கொடுத்திருக்கிறது சிபி அண்ட் டீம்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்ரவர்த்தியின் இயக்கிய முதல் படமாக வந்திருக்கிறது டான். படிப்பு மட்டுமே உன்னை உயர்த்தும் என்ற எண்ணம் கொண்ட சராசரி தந்தைக்கும், படிப்பை தவிர வேறு வழியிலும் முன்னேறலாம் என்ற எண்ணம் கொண்ட மகனுக்கும் இடையேயான லட்சிய போராட்டம் தான் டான் கதைக்களம். தந்தையின் கட்டாயத்தின் பேரில் இன்ஜினியரிங் காலேஜில் சேரும் சிவகார்த்திகேயன் என்ஜினீயர் ஆனாரா? தனது திறமையை கண்டுபிடித்து தன் விருப்பப்படி வென்றாரா? என்பதே மீதிக்கதை.

இன்ஜினியரிங் காலேஜில் சேரும் சிவகார்த்திகேயனுக்கும் அங்கு டிசிப்ளின் கமிட்டி தலைவராக இருக்கும் எஸ்ஜே சூர்யாவிற்கும் இடையேயான மோதலாக விரிகிறது முதல் பாதி. காலேஜ் கதைக்களத்தில் மிர்ச்சி விஜய், பால சரவணன் போன்றோரை நண்பர்களாக வைத்து அதகளம் செய்கிறார் சிவகார்த்திகேயன். 1 மணி நேரம் 30 நிமிடம் முதல் பாதி சென்றாலும் ஆடியன்ஸுக்கு எங்கும் சலிப்பு தட்டாத வகையில் சிவகார்த்திகேயனின் பலத்திற்கு ஏற்ற வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தில் சல்லடை போல் இருக்கும் ஓட்டைகளில் தன்னுடைய இசையை தூவி அழகுபடுத்தி அடித்து நொறுக்கியிருக்கிறார் இசை ரவுடி அனிருத்.

சிவகார்த்திகேயனின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் பார்வையாளர்களை கட்டி போட வைக்கிறது. பொதுவாக தனது துள்ளலான நடிப்பாலும், டைமிங் கவுன்டர்களிலும் கலக்கும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் சோக காட்சிகளிலும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை ஒரு முழுமையான நடிகனாக நிலைநிறுத்துகிறார். முந்தைய படங்களை விட சிவகார்த்திகேயன் நடனங்களில் டெடிகேஷனும், பெர்ஃபெக்‌ஷனும் பல மடங்கு கூடியிருக்கிறது.

டிசிப்ளின் கமிட்டி தலைவராக வரும் எஸ்ஜே சூர்யா, தனது வழக்கமான பாணியில் நடித்திருந்தாலும் நம்மை ஈர்க்க தவறவில்லை. கறார் தந்தையாக நடுத்தர வர்க்க தந்தையின் தவிப்பையும், ஏக்கத்தையும் கண் முன் நிறுத்திக்கிறார் சமுத்திரக்கனி. டாக்டர் படத்தை தொடர்ந்து இதிலும் பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயன் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்திருக்கிறது. இவர்களுடன் ஜார்ஜ், மிர்ச்சி விஜய், பால சரவணன், ராதாரவி, சூரி, சிங்கம்புலி ஆகியோரும் படத்திற்கு வலு சேர்க்கின்றனர்.

இன்ஜினியரிங் மோகம், இன்றைய கல்வி முறையில் இருக்கும் சிக்கல்கள, தங்களது ஆசையை குழந்தைகள் மீது திணிக்கும் பெற்றோர்கள் என சீரியசான டாபிக்ஸ் வழியே படம் சென்றாலும் அதில் அதிக கவனம் செலுத்தாதது படத்தின் பலமாகவும், பலவீனமாகவும் அமைகிறது. சில பல லாஜிக் மீறல்கள், வலிந்து திணிக்கப்பட்ட சோக காட்சிகள், படத்தின் நீளம் போன்றவை படத்தை பின் நோக்கி இழுத்தாலும் அவை அனைத்தையும் டாப் கியரில் முன்னோக்கி இழுத்து சென்றிருக்கிறார் டான் சிவகார்த்திகேயன்.

– சந்தோஷ்.

Advertisement:
SHARE

Related posts

புதிய வண்ணங்களில் ராயல் என்ஃபீல்டு அறிமுகம்!

எல்.ரேணுகாதேவி

பட்ஜெட் 2022: தமிழக புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ரூ.1,000 ஒதுக்கீடு

Saravana Kumar

தமிழ்நாட்டில் லேசான மழைக்கு வாய்ப்பு

Jeba Arul Robinson