பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கும் திட்டமே ‘சிற்பி’-முதலமைச்சர் ஸ்டாலின்

சிறார் குற்றங்களுக்கு தீர்வு காணும் வகையில் “சிற்பி” என்ற புதிய திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் உட்பட சிறார்களால் ஏற்படும் குற்றங்களைத் தடுக்கவும், போதைக்கு…

சிறார் குற்றங்களுக்கு தீர்வு காணும் வகையில் “சிற்பி” என்ற புதிய திட்டத்தை
சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் உட்பட சிறார்களால் ஏற்படும் குற்றங்களைத்
தடுக்கவும், போதைக்கு எதிரான விழிப்புணர்வை சிறார்களிடையே ஏற்படுத்தும்
விதமாகவும், முன்மாதிரி முயற்சியாக காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவர்கள்
செயல்படும் வகையில் ரூ.4.25 கோடி மதிப்பில் “சிற்பி” என்ற புதிய திட்டம்
கொண்டுவரப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 100 மாநகராட்சி பள்ளிகளில் 8-ம் வகுப்பில் பயிலும் தலா 50
மாணவர்கள் சிற்பி திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகர காவல்துறையுடன் இணைந்து, பள்ளி மாணவர்கள் செயல்படும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிற்பி திட்ட மாணவர்களுக்கு பிரத்யேக
சீருடையும் வழங்கப்பட்டுள்ளது. சிறார் குற்றச்செயல்களுக்கு தீர்வு காணுதல், பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு வழிகாட்டுதல், பள்ளிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளில் சிற்பி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், முன்னதாக அவர்களுக்கு ஒரு மாத காலத்துக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக திட்ட தொடக்க விழாவில் பேசிய தலைமைச் செயலாளர் இறையன்பு, ஒவ்வொரு மாணவருக்கும் சிற்பமாக மாறும் ஆற்றல் உண்டு என்றும் அதற்கான தேவையும் உண்டு என்றும் மாணவர்கள் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டியவர்கள் என்றும் மாணவர்கள் ஒழுக்கமும், பண்பும், அறமும் உடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் அதற்காகவே சிற்பி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

போதை மற்றும் மதுவுக்கு எதிரானவர்களாக மாணவர்கள் உருவெடுக்க வேண்டும் என்றும் சக மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக சிற்பி மாணவர்கள் விளங்க வேண்டும் என்றும் மனிதரும், சிம்பன்ஸியும் ஒன்று என்றும், சிற்பி திட்டத்தின் கீழ் தேர்வு
செய்யப்பட்டுள்ள மாணவர்களை, காவல் துறையினர் செதுக்கவுள்ளதாகவும் தலைமைச்
செயலாளர் இறையன்பு குறிப்பிட்டார்.

பின்னர் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

காவல் துறை மக்களின் நண்பன் என்று சொல்லும் வேளையில், மக்களும் காவல்துறையின் நண்பனாக இருக்க வேண்டும் என்பதே தமது எண்ணம். காவல் துறையும், மக்களும் இணைந்து செயல்பட்டால் குற்றங்களே இருக்காது. காவல்துறைக்கும், மக்களுக்கும் பாலமாக சிற்பி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கும் திட்டமே சிற்பி.

சிறுவர்களை பொது ஒழுக்கம், சமூகப்பொறுப்பு உடையவர்களாக உருவாக்கும் முயற்சியே இது.  சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு காரணம் குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு தான். சிறார் குற்றச் செயல்களை தடுக்க
காவல்துறை செயல்பட்டு வருகிறது.

வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், சமூகப் பிரச்னைகளும் அதிகமாகி வரும் சூழலில், போதைப்பொருள் நடமாட்டத்தைக் கண்காணித்து, அதை ஒழிக்கும் நடவடிக்கைகள், போக்குவரத்து விதிகளை கடைபிடித்தல் உள்ளிட்ட பண்புகளை சிறார்களிடத்தில் ஏற்படுத்தி, சிற்பி போல் மாணவர்களை செதுக்கிட வேண்டும்.

சிற்பி திட்டத்துக்காக 8-ம் வகுப்பு பயிலும் 2,764 மாணவர்கள் , 2,634 மாணவியர்
தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிற்பி திட்ட மாணவர்களுக்கு பயிற்சி, ஊட்டச்சத்து உணவு உள்ளிட்டவற்றுடன் நிர்ணயிக்கப்பட்ட 8 இடங்களுக்கு கல்விச் சுற்றுலாவும் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிற்பி திட்டக் காலத்தில் மனித உரிமை மீறல் இருக்கக் கூடாது. எவ்வித புகாருக்கும் இடமின்றி சிற்பி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.

நன்றியுரை நிகழ்த்திய டிஜிபி சைலேந்திர பாபு, “முதலமைச்சருக்கு குழந்தைகளைப் பிடிக்கும். குழந்தைகளுக்கும் முதலமைச்சரைப் பிடிக்கும். முதலமைச்சருக்கும், குழந்தைகளுக்கும் நல்ல Chemistry உள்ளது. காவல்துறையை முதலமைச்சருக்கும் பிடிக்கும், குழந்தைகளுக்கும் பிடிக்கும். காவல்துறை உங்களின் நண்பன்.
BMW என்பது கார்; ஆனால் சிற்பி திட்ட்ம BIW என்னும் Best In the World திட்டம்.
குடும்ப சூழல் சரியில்லாத மாணவர்களை நல்வழிப்படுத்தும் திட்டமே சிற்பி. சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தான் சிற்பி திட்டத்தின் சிற்பி” என்றார் சைலேந்திரபாபு.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.