கடைசி நேரத்தில் எடுத்த முடிவால் ரயில் விபத்தில் சிக்காமல் உயிர் தப்பிய கர்நாடக வாலிபால் அணியினருக்கு என்ன நடந்தது. விரிவாக காணலாம்.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில் 301பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 900பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கர்நாடகாவைச் சார்ந்த 16 வயதிற்குட்பட்ட கைப்பந்து அணியினர் ஆண்கள் 18பேர் , பெண்கள்14பேர் மற்றும் பயிற்சியாளர்கள் கல்கத்தாவிற்கு விளையாட்டு போட்டிக்காக சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் போட்டி முடிந்து சொந்த ஊரான கர்நாடகாவிற்கு திரும்ப கோரமண்டல் ரயிலில் டிக்கெட் பதிவு செய்திருந்தனர்.
கடைசி நேரத்தில் இந்த அணியினரில் சிலருக்கு முன்பதிவு டிக்கெட் உறுதி செய்யப்படாத காரணத்தால் மொத்த அணியினரும் டிக்கெட்டை ரத்து செய்து வேறொரு ரயிலுக்கு டிக்கெட் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில்தான் கோரமண்டல் ரயில் விபத்திற்குள்ளானது.
கைப்பந்து அணியினர் கோரமண்டல் ரயிலில் பயணிக்காததால் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளனர். ” நாங்கள் அனைவரும் மாலை 5மணிக்கு ரயிலில் ஏறியிருக்க வேண்டும். எங்கள் அணியில் உள்ள சிலருக்கு கடைசி நேரத்தில் டிக்கெட் உறுதி செய்யப்படாததால் அந்த ரயிலில் பயணிக்கவில்லை. ரயிலில் பயணம் செய்யாததால் நல்ல வேளையாக அனைவரும் உயிர் தப்பினோம்” என கைப்பந்து அணியின் பயிற்சியாளர் மஹாதேவ மூர்த்தி தெரிவித்துள்ளார்.







