வேளாண் வளர்ச்சியை பாதிக்கும் திமுக அரசின் திட்டத்தை செயல்படுத்துவதா? – அன்புமணி கேள்வி?

உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் முந்தைய திமுக ஆட்சியால் கொண்டு வரப்பட்டு, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டதை செயல்படுத்துவதற்கும், இந்தத் திட்டத்தின்படி வேளாண் துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை பட்டியலிட்டும் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. வேளாண் துறை அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, உழவர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தவெக அரசு முயல்வது நியாயமல்ல.

தமிழ்நாட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தத் துறைகளின் பணிகளும், நோக்கங்களும் வெவ்வேறானவை. அதை கருத்தில் கொண்டு தான் 1979ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஒன்றாக இருந்த இந்தத் துறைகள் காலப்போக்கில் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. ஆனால், உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டம் என்ற பெயரில் இந்தத் துறைகளில் பணியாற்றும் கள அதிகாரிகள் அனைவரையும் ஒன்றாக இணைத்து, அனைத்துத் துறை பணிகளையும் செய்ய வேண்டும் என்று 2023ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் நாள் திமுக ஆட்சியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அப்போதே இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

ஆனால், 2024ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதை நிறுத்தி வைத்த திமுக அரசு, திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்து இரு ஆண்டுகள் கழித்து 2025-ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிர்வாக வழிகாட்டுதல்களை வழங்கி அரசாணை பிறப்பித்தது. அதன்பின் 2025ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி ஆகிய மாதங்களில் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளின் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.

எனினும், வேளாண் துறை அதிகாரிகள், உழவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவை மத்தியில் எழுந்த எதிர்ப்பு காரணமாக இத்திட்டத்தின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. முந்தைய திமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட இத்திட்டத்தை செயல்படுத்துவதில் புதிய அரசு அவசரம் காட்டுகிறது. இதற்காக கடந்த 19-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில் அதிகாரிகளுக்கான பணி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து கிராமங்களுக்கும் குறைந்தது வாரம் ஒரு முறை செல்ல வேண்டும்; இதற்காக வாரத்திற்கு நான்கு நாள்கள் கிராமத்திற்கு செல்ல வேண்டும்; களப்பணியை முடித்த பின் அலுவலகங்களுக்கு சென்று நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என 56 வகையான பணி நிபந்தனைகளும், அதற்கும் மேலாக உயரதிகாரிகள் செய்யும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இது அநீதியானது மட்டுமின்றி சாத்தியமற்றதும் ஆகும்.

அதிகாரிகள் எந்தெந்த துறைகளில் வல்லமை பெற்றிருக்கிறார்களோ, அந்தத் துறையின் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்வது தான் அறிவார்ந்த செயல். வேளாண்மையில் வல்லமை பெற்ற ஒருவர் தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிகளுக்கு ஆலோசனை வழங்கினால் அது பயனுள்ளதாக இருக்காது. அதேபோல், தோட்டக்கலை அதிகாரிகளுக்கு நெற்பயிரைத் தாக்கும் நோய்கள், பூச்சிகள் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் கள அதிகாரிகளுக்கு பணிச்சுமை குறையும்; இதுவரை 10 முதல் 12 கிராமங்களை கவனித்து வந்த அதிகாரிகள் இனி 3 முதல் 4 கிராமங்களை கவனித்தால் போதுமானது என்று அரசு விளக்கமளிக்கிறது. இதை ஏற்றுக முடியாது. இந்தத் திட்டத்தின் மூலம் உழவர்களுக்கு தவறான ஆலோசனைகள் வழங்கப்படலாம். இது வேளாண் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும்.

முந்தைய ஆட்சியில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் முதன்மையானது வேளாண் துறை. கடந்த இரு ஆண்டுகளாக வேளாண் உற்பத்தி வீழ்ச்சி அடைந்து வருகிறது. அத்தகைய அரசால் உருவாக்கப் பட்டு உழவர்கள் மற்றும் வேளாண் அதிகாரிகளின் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு திட்டத்தை புதிய அரசு செயல்படுத்தக் கூடாது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் வேளாண் துறை வீழ்ச்சிக்கு வழிவகுத்து விடக் கூடாது. உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.