“அங்காடித் தெரு” திரைப்படத்தில் நடித்த சிந்து மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 42.
வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான ‘அங்காடிதெரு’ திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் சிந்து. இவர் நாடோடிகள், தெனாவெட்டு, நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் குறையவே தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த அவருக்கு ஆரம்பத்தில் ஒருபுறம் மட்டும் மார்பகம் நீக்கப்பட்டு இருந்தது. இறுதியாக இரண்டு மார்பகங்களும் நீக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 2:15 மணியளவில் அவருடைய வளசரவாக்கம் இல்லத்தில் காலமானார்.
அவரது உடல், வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை விருகம்பாக்கம் மின் மயானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இவரது மறைவுக்கு பல்வேறு துணை நடிகர்களும், சினிமா ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.







