மகாராஷ்டிராவில் முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அதிருப்தி அமைச்சர்களின் பதவி 24 மணி நேரத்தில் பறிபோகும் என சிவசேனா தலைமை எச்சரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மகாவிகாஸ் கூட்டணி அரசு சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களால் ஆட்டம் கண்டுள்ளது. அக்கட்சியில் மொத்தமுள்ள 55 எம்.எல்.ஏக்களில் மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏக்களுக்கும் அதிகமானோர் முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். சிவசேனா தாக்ரே பிரிவு என தங்களை தனி அணியாக அவர்கள் அறிவித்துள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏகளில் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 6 பேர் அமைச்சர்களாகவும் உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகள் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நிலையில் சொந்த கட்சி எம்.எல்.ஏக்களால் தனது ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது மகாராஷ்டிர முதலமைச்சரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்ரேவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியிருந்து மீள அவர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவருக்கு சிவசேனா தேசிய செயற்குழு முழு அதிகாரம் அளித்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், அதிருப்தி கோஷ்டியில் உள்ள குலபிராவ் பட்டீல், தாதா புசே, சாண்டிபன் பும்ரேவின் ஆகியோரின் அமைச்சர் பதவிகள் 24 மணி நேரத்தில் பறிபோகும் என்றார். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். 2019ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்கு பின்னர், ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, சுழற்றி முறையில் முதலமைச்சர் பதவியை பகிர வேண்டும் என சிவசேனா நிபந்தனை விதித்ததை சஞ்சய் ராவத் சுட்டிக்காட்டினார். சிவசேனாவிற்கு முதலமைச்சர் பதவி வரும்போது அந்த பதவியை ஏக்நாத் ஷிண்டேவிற்கு வழங்கவே உத்தவ் தாக்ரே தீர்மானித்திருந்ததாகவும் சஞ்சய் ராவத் கூறினார்.