ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கடும் உயர்வு!

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் மாட் டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து வருகிறது.

நாடு முழுவதும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. மேலும் தசரா பண்டிகையையும் தொடங்கி நடைபெற்று வருவதால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் நாளை ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் மாட் டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து. மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகம். இங்கு வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, திருப்பரங்குன்றம், அவனியாபுரம், கொட்டாம்பட்டி, மேலூர், அழகர் கோயில் உட்பட மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதுரை மல்லி கணிசமாக விளைவிக்கப்படுகிறது.

அதுமட்டுமன்றி அண்டை மாவட்டங்களான தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் விளைவிக்கப்பட்டு, மதுரை மலர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் விசேஷ நாட்கள் இல்லாததால் ஒரு மாதமாகவே பூக்கள் விலை குறைவாகவே இருந்தது. தற்போது மழை பெய்து வருவதாலும், விழாக்காலம் என்பதாலும் படிப்படியாக விலை உயர்ந்து வருகிறது.

மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்:

மதுரை மல்லி கிலோ ரூ.1800,
பிச்சி ரூ.1000,
முல்லை ரூ.1100,
செவ்வந்தி ரூ.300,
சம்பங்கி ரூ.350,
செண்டு மல்லி ரூ.120,
கனகாம்பரம் ரூ.2000 ,
ரோஸ் ரூ.350,
பட்டன் ரோஸ் ரூ.300,
பன்னீர் ரோஸ் ரூ.400,
கோழிக்கொண்டை ரூ.120,
அரளி ரூ.500,
மரிக்கொழுந்து ரூ.150,
தாமரை (ஒன்றுக்கு) ரூ.30 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.