ஐபிஎல் விளையாட்டு, இந்த முறை எவ்வளவு போட்டியானதாக இருந்தாலும், என் நண்பரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் களத்தில் இறங்குவதைப் பார்க்கும்போது, மகிழ்ச்சியாக இருக்கிறது என நடிகர் ஷாருக்கான் சுவாரஸ்யமான ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 31ம் தேதி துவங்கி தற்போது தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முறை சென்ற ஆண்டு போல் இல்லாமல் எல்லா அணிகளுமே மாறி மாறி வெற்றிகளை பெற்று வருவதோடு, முதல் நான்கு இடத்தை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில், நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் மற்றொரு கூடுதல் சிறப்பு என்னவென்றால், ஐபிஎல் தொடரில் முதல்முறையாக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமாகி விளையாடிய முதல் போட்டி இதுதான். இதனால் சச்சின் மகன் விளையாடுகிறார் என்பதாலேயே, இந்த போட்டியை காண பெரும்பாலான ரசிகர்கள் மிகுந்த
ஆர்வத்துடன் ஸ்டேடியத்தில் குவிந்திருந்தனர். 23 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கரை கடந்த 2021-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்திலேயே மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி இருந்த போதிலும், நேற்றைய போட்டியில் தான் முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் களம் இறக்கப்பட்டார்.
https://twitter.com/sachin_rt/status/1647633498520559617?s=20
இந்நிகழ்வு குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை அவர் பகிர்ந்திருந்தார் அதில் “அர்ஜுன், இன்று நீ கிரிக்கெட் வீரராக உனது பயணத்தில் இன்னொரு முக்கியமான அடி எடுத்து வைத்துள்ளாய். உன் தந்தையாக, உன்னை நேசிக்கும், விளையாட்டின் மீது நாட்டம் கொண்ட ஒருவனாக, விளையாட்டிற்குத் தக்க மரியாதையைத் தொடர்ந்து அளிப்பாய், விளையாட்டும் உன்னை நேசிக்கும் என்று எனக்குத் தெரியும். நீ இங்கு வருவதற்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளாய். அதைத் தொடர்ந்து செய்வாய் என்று நான் நம்புகிறேன். இது ஒரு அழகான பயணத்தின் தொடக்கமாகும். ஆல் தி பெஸ்ட்!” என்று தெரிவித்திருந்தார்.
இதே போல் தற்போது பிரபல பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளருமான நடிகர் ஷாருக்கானும் இந்நிகழ்வு குறித்து சுவாரஸ்யமான ட்விட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “இந்த ஐபிஎல் விளையாட்டு இந்த முறையும் எவ்வளவு போட்டியானதாக இருந்தாலும்… என் நண்பரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் களத்தில் இறங்குவதைப் பார்க்கும்போது, அது மகிழ்ச்சியை தருகிறது. அர்ஜுனுக்கும், சச்சின் டெண்டுல்கருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என அவர் தெரிவித்திருந்தார். தற்போது இந்த ட்விட் வைரலாகி வருகிறது.
https://twitter.com/iamsrk/status/1647876810506371072?s=20
- பி.ஜேம்ஸ் லிசா









