சிவசங்கர் பாபாவிற்கு எதிரான பாலியல் வழக்கு! புகார் அளித்த மாணவி ஆஸ்திரேலியாவிலிருந்து காணொலி வாயிலாக ஆஜராக நீதிமன்றம் அனுமதி!

சிவசங்கர் பாபாவிற்கு எதிராக பாலியல் தொல்லை புகார் அளித்த முன்னாள் மாணவி ஆஸ்திரேலியாவிலிருந்து காணொலி மூலம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள…

சிவசங்கர் பாபாவிற்கு எதிராக பாலியல் தொல்லை புகார் அளித்த முன்னாள் மாணவி ஆஸ்திரேலியாவிலிருந்து காணொலி மூலம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில்
படித்தபோது, அதன் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் மாணவி ஒருவர் கடந்த 2021ம் ஆண்டு புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது,
சிவசங்கர் பாபா தரப்பில் புகார் அளித்த மாணவி ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும்,
மின்னஞ்சல் மூலமாக புகாரளித்ததாக கூறப்படும் நிலையில், புகாரின் உண்மைத்தன்மை
குறித்து சந்தேகம் எழுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அந்த முன்னாள் மாணவியை, சிபிசிஐடி
காவல்துறையினர், இன்று காணொலி காட்சி மூலம் உயர் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தினர்.

அப்போது அந்த பெண், சிவசங்கர் பாபா மிகவும் செல்வாக்கானவர் என்பதால் தனது
பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்தியாவிற்கு வந்து நேரில் ஆஜராக இயலாது
என்றும், காணொளி வாயிலாக எப்போது வேண்டுமானாலும் வாக்குமூலம் கொடுக்க தயாராக இருப்பதால் அதற்கு அனுமதி வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இதையேற்ற நீதிபதி, வாக்குமூலத்தை பெறுவதற்கான தேதியை செங்கல்பட்டு நீதிமன்றம்
முடிவு செய்து, காணொளி வாயிலாக முன்னாள் மாணவியை ஆஜராக சொல்லி, வாக்குமூலம் அளிக்க ஏற்பாடு செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார்.

மேலும் மாணவியின் வாக்குமூலம் நிறைவுபெற்ற பிறகு, சிவசங்கர் பாபாவின் மனு
விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றும் நீதிபதி வி.சிவஞானம் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.