வரி ஏய்ப்பு செய்யக்கூடியவர்களை கண்டறிந்து கடுமையான தண்டனை கொடுப்போம் என பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் உள்ள வணிக வரி துறை அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றும் அலுவலர்களுக்கு விருதுகளும், துறை ரீதியாக அலுவலர்களுக்கு வாகனங்களும் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் வணிக வரித்துறை அலுவலர்களுக்கு 18 வாகனங்களும், பதிவுத்துறை அலுவலர்களுக்கு 20 வாகனங்களும் , கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையும், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பரிசுக் கோப்பையும் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, இனி வரும் காலங்களில் வணிகவரி துறை மற்றும் பதிவு துறையில் வருவாய் ஈட்டுவதற்கு பல்வேறு நடைவடிகைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். கடந்த ஆண்டை விட இந்த துறை இந்தாண்டும் மிக வேகமாகவும் , சிறப்பாகவும் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முதல்கட்டமாக 100 அலுவலகங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாகவும், வரகூடிய நாட்களில் அதனை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி கூறினார். இட ஒதுக்கீட்டிற்காக கலைஞர் வழியிலேயே முதல்வர் செயல்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், வரி ஏய்ப்பு செய்யக்கூடியவர்களை கண்டறிந்து கடுமையான தண்டனை கொடுப்போம் என சென்ற ஆண்டே சொல்லி இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே, வரி ஏய்ப்பு செய்பவர்களை அரசு கண்டறிந்து வசூல் செய்வதற்கு முன்பே, அவர்களே தாமாகவே முன்வந்து வரியை செலுத்த வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.








