தொடர் விடுமுறைகளால் சென்னையிலிருந்து விமானங்களில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் விமான பயணச்சீட்டு கட்டணங்கள் இரு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளன. மீலாது நபி, காந்தி ஜெயந்தி என 5 நாள்கள் தொடர் அரசு விடுமுறை என்பதால், சென்னையிலிருந்து வெளியூருக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிரித்துள்ளது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடங்கி விட்டதால் குடும்பத்துடன் சொந்த ஊர் மற்றும் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்த தொடர் விடுமுறையால் சுற்றுலா தளங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் சென்னையிலிருந்து செல்லும் விமானங்களில் பயணச்சீட்டுக் கட்டணம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக சென்னையிலிருந்து சுற்றுலாத் தலமான தாய்லாந்துக்கு வழக்கமாக 9 ஆயிரம் வசூலிக்கப்படும் நிலையில் செப்.27 முதல் 29-ஆம் தேதி வரை ரூ.22,000 முதல் ரூ.39ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.
இதுபோல் சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமானங்களிலும் கட்டணமும் அதிகரித்துள்ளது. உள்நாட்டு விமானங்களிலும், சென்னை தூத்துக்குடி விமானங்களிலும் கட்டணம் அதிரித்துள்ளது. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.3,853 வசூலிக்கப்படும் நிலையில் செப். 28-ஆம் தேதி ரூ.11,173, செப். 29-ஆம் தேதி ரூ.9,975 வசூலிக்கப்படுகிறது.







