பாட்னா பயமா? முரசொலி தலையங்கம்

பாட்னாவில் எதிர்கட்சிகளின் அணி சேர்க்கை வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுகவை அசைத்துப் பார்க்க பா.ஜ.க நினைப்பதாகவும், . அதற்கு செந்தில்பாலாஜி வழக்கு ஒரு துருப்புச் சீட்டு என முரசொலி தலையங்கத்தில்…

பாட்னாவில் எதிர்கட்சிகளின் அணி சேர்க்கை வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுகவை அசைத்துப் பார்க்க பா.ஜ.க நினைப்பதாகவும், . அதற்கு செந்தில்பாலாஜி வழக்கு ஒரு துருப்புச் சீட்டு என முரசொலி தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக முரசொலியில் இன்று வெளியான தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

10 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு புகாரை வைத்து தற்போது விசாரணைக்கு வந்து – ஒரே நாளில் 18 மணி நேரம் விசாரணை என்ற பெயரால் சித்திரவதை செய்து – அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையை எதற்காக உருவாக்க வேண்டும்? அதற்கான அவசியம் என்ன வந்தது? அமைச்சராக இருக்கிறவர் ஓடிப் போகப் போகிறாரா? லலித் மோடி – நீரவ் மோடிகளைப் போல ஓடிப் போகப் போகிறாரா?

வருமானவரித் துறையை வைத்து 10 நாட்களாக கரூரில் சோதனை நடத்துவதும் – அடுத்து அமலாக்கத்துறை வருவதும் – 18 மணி நேரம் சித்திரவதை செய்வதும் – மத்திய பாதுகாப்புப் படை போலீஸாரை தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்துக்குள் அனுப்பி வைப்பதும் இதய நோயால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக சிறைக்குக் கொண்டுபோகத் துடிப்பதும் – வழக்கு விசாரணைகள் போலத் தெரியவில்லை. அச்சம் ஏற்படுத்த நினைக்கும் வழிமுறைகளாகவே உள்ளன. இதனைத்தான் உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறைக்கு உணர்த்தியது.

2004-14 காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 112 ரெய்டுகள் நடந்துள்ளன என்றால். பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் 3,010 ரெய்டுகள் நடந்துள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்துவதைப் போல ரெய்டுகள் நடத்தி இருக்கிறார்கள். இதற்குத்தான் அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அதுவும் பட்டவர்த்தனமாக ஒளிவுமறைவு இல்லாமல் அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம். கர்நாடக காங்கிரஸ் தலைவரும் தற்போதைய துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார். மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக். சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத். டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் – ஆம் ஆத்மியைச் சேர்ந்த சத்யேந்தர் ஜெயின், மகாராஷ்டிரா சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக் – இவர்களை திட்டமிட்டு கைது செய்து அடைத்தார்கள். “எங்களுக்கு எதிராக இருக்காதே- அல்லது எங்களோடு சேர்ந்து விடு” என்பதுதான் இந்த கைதுக்கான ஒற்றைக் காரணம் ஆகும்.

பாஜக நேர்மையின் சிகரங்கள் என்றால். பழனிசாமி அணியோடு கைகோர்த்து நிற்பார்களா? பழனிசாமி தயவில் கட்சி நடத்திக் கொண்டு ஊழலைப் பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசலாமா? அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் – அடுத்தவர் ஊழலைப் பற்றிப் பேசுவதற்கான தகுதி வந்துவிடுமா?

பாஜகவை எதிர்க்கும் கட்சிகளின் அணி சேர்க்கையானது வருகிற 23ஆம் நாள் பாட்னாவில் நடக்க இருக்கிறது. அதில் திராவிட முன்னேற்றக் கழகம் முக்கியப் பங்காற்ற இருக்கிறது. இந்த நிலையில் திமுகவை அசைத்துப் பார்க்க நினைக்கிறது பா.ஜ.க. அதற்கு செந்தில் பாலாஜி வழக்கு ஒரு துருப்புச் சீட்டு. அச்சம் நிறைந்த சூழ்நிலையில் பா.ஜ.க. இருப்பதையே இது காட்டுகிறது.”

இவ்வாறு முரசொலி தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.