கேரளா மூத்த சிபிஎம் தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது 69. மூத்த அரசியல்வாதியும், கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான கொடியேரி பாலகிருஷ்ணன், புற்று நோயால் பாதிக்கப்பட்டு…

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது 69.

மூத்த அரசியல்வாதியும், கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான கொடியேரி பாலகிருஷ்ணன், புற்று நோயால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்தார். அவரது உடல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை கேரள மாநிலம் கண்ணூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

கொடியேரி பாலகிருஷ்ணன் 1953 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி தலச்சேரியில் உள்ள கொடியேரியில் பிறந்தார். ஆரம்ப காலத்தில் சிபிஎம், கேரள மாணவர் கூட்டமைப்பில் மாணவர் பிரிவின் மூலம் அரசியலில் காலடி எடுத்து வைத்தார். பின்னர் இந்திய மாணவர் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளராகவும், தேசிய இணைச் செயலாளராகத் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.

2022 ஆகஸ்ட் மாதம் அவரது உடல்நிலை மோசமடைந்தது வரை கொடியேரி பாலகிருஷ்ணன் சிபிஎம் கேரளாவில் கட்சியை வழிநடத்தினார். மேலும் இவர் கேரளாவில் சிபிஎம் கட்சியின் தேசாபிமானி என்ற மலையாளப் பத்திரிகையின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவருக்கு எஸ்.ஆர்.வினோதினி என்ற மனைவியும், பினாய் கொடியேரி, பினீஸ் கொடியேரி என்ற இரு மகன்களும் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.