மின்மயமாக்கல் பணிகள் நிறைவு: செங்கோட்டை – புனலூர் ரயில் பாதையில் சோதனை ஓட்டம் வெற்றி!

செங்கோட்டை – புனலூர் ரயில் பாதையில் மின்சார இன்ஜின் மூலம் அதிவேகமாக ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. நாட்டில் உள்ள ரயில் பாதைகளிலேயே மிகவும் குறைவான வேகத்தில் (30 கி.மீ.) ரயில் இயக்கப்படும்…

செங்கோட்டை – புனலூர் ரயில் பாதையில் மின்சார இன்ஜின் மூலம் அதிவேகமாக ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது.

நாட்டில் உள்ள ரயில் பாதைகளிலேயே மிகவும் குறைவான வேகத்தில் (30 கி.மீ.) ரயில் இயக்கப்படும் பாதை செங்கோட்டை – புனலூர் அகல ரயில் பாதை.  செங்கோட்டை – புனலூர் வழித்தடத்தில் சென்னை – கொல்லம், மதுரை – குருவாயூர், பாலருவி எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரயில்கள் தினமும், எர்ணாகுளம் – வேளாங்கண்ணி ரயில் வாரம் இரு முறையும் இயக்கப்படுகின்றன.

இவ்வழிதடத்தில் கூடுதல் பெட்டிகளுடன் அதிக வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே துறையின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிலைகள் அமைப்பு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.  இந்நிலையில் செங்கோட்டை – புனலூர் ரயில் பாதை முழுவதும் நடைபெற்று வந்த மின்மயமாக்கல் பணி நிறைவடைந்ததை அடுத்து, தெற்கு ரயில்வேயின் தலைமை மின்பொறியாளர் மற்றும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் முன்னிலையில் பரிசோதனை ஓட்டம் நடைபெற்றது.  கேரள மாநிலம் எடமான் முதல், தமிழ்நாட்டில் உள்ள பகவதிபுரம் வரை மின்சார இன்ஜின் மூலம் அதிவேகமாக ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து,  இந்த வழித்தடத்தில் மின்சார ரயிலை இயக்க PCEE சான்றிதழ் கொடுக்கப்பட்ட பிறகு செங்கோட்டை – புனலூர் ரயில் வழித்தடத்தில் மின்சார இன்ஜின் மூலம் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், கொல்லம்- புனலூர் ரயில் பாதையில் இயக்கப்படும் ரயில்கள் செங்கோட்டை,‌ திருநெல்வேலி, மதுரை வரை நீட்டித்து இயக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.