செண்டுமல்லி விலை தொடர் சரிவு – விவசாயிகள் கவலை

செண்டுமல்லி மலர்கள் விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் விவசாயத்தை நம்பியே உள்ளன. அவற்றில் நெல், ராகி, கரும்பு அதற்கு அடுத்தபடியாக பூக்கள் விளைச்சல் தான்…

செண்டுமல்லி மலர்கள் விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் விவசாயத்தை நம்பியே உள்ளன. அவற்றில் நெல், ராகி, கரும்பு அதற்கு அடுத்தபடியாக பூக்கள் விளைச்சல் தான் மாவட்டம் முழுவதும் அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது. உள்மாவட்ட தேவைக்கும், வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கும் அதிக அளவில் ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சம்பங்கி, குண்டுமல்லி, சாமந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட பூ வகைகளும் அடங்கும். பூக்கள் பயிரிடும் விவசாயிகள் ஒரு சில நேரங்களில் விலை கை கொடுத்தாலும் மற்ற நேரங்களில் அதற்கான செலவினங்கள் மற்றும் நோய் தாக்குதலால் பெரிதும் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், நாகாவதி அணையை ஒட்டி உள்ள பகுதியில் வருடம் முழுவதும் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. அதேபோல, அங்கு சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் விவசாயி ஒருவர் செண்டுமல்லி பயிரிட்டு இருந்தார். செடிகள் நன்கு வளர்ந்து பூப்பூத்த தருணத்தில் விலை குறைவு மற்றும் தொடர் நோய் தாக்குதல்,
பூக்களைப் பறிப்பதற்கு ஆள்பற்றாக்குறை, அவ்வாறு பறித்தாலும் பூ விலை சரிவால்
பறிக்கின்ற பூக்களுக்கு கூலி கூட கொடுக்க முடியாத நிலை உள்ளது.

தற்போது செண்டுமல்லி ஒரு கிலோ 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், செண்டுமல்லி தோட்டத்தை தொடர்ந்து பராமரிக்கும் சிக்கல் மற்றும் செலவினங்களை யோசித்து விவசாயி மாற்றுப் பயிரிட முடிவு செய்து பூக்கள் பூத்திருந்த செண்டுமல்லி தோட்டத்தை அப்படியே டிராக்டர் வைத்து உழுதுவிட்டார்.

பூக்கள் பயிரிடும் விவசாயிகள் ஒரு சில நேரத்தில் விலை ஏறுமுகத்தில் இருந்தாலும் மற்ற நேரங்களில் தொடர் சரிவால் அதிக அளவு நஷ்டமும் ஏற்படுகிறது. இதற்காக விவசாயிகள் முன்னெச்சரிக்கையாக அதற்கு ஏற்ப பூக்கள் காய்கறிகள் உள்ளிட்டவற்றை சரியான தருணத்தில் பயிரிட்டு விலை சரிவு மற்றும் நஷ்டம் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொண்டால் மட்டுமே விவசாயத்தில் ஏற்படும் நஷ்டத்தை தடுக்க முடியும்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.