மூன்றாம் பாலினத்தவருக்கு தனியாக சுய உதவி குழுக்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை சார்பில் ’வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. தனியார் ஹோட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில் குமார், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை செயல் அலுவலர் திவ்யதர்ஷினி, திட்ட முதன்மை செயலாக்க அலுவலர் பத்மஜா, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்கள், மற்றும் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்த பொருட்களின் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் மதி சிறகுகள் தொழில் மையத்தின் இலட்சினையை அமைச்சர் உதயநிதி வெளியிட்டார். தொடர்ந்து வாழ்ந்து காட்டுவோம் திட்ட பயனாளர்களின் வெற்றி புத்தகத்தினையும் அவர் வெளியிட்டார். பின் உற்பத்தியாளர் சந்தையாளர் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறி கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
“பொருளாதார சுதந்திரமே பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் என பெரியார் கூறி உள்ளார். அதன் அடிப்படையில் பெண்கள் முன்னேற்றத்திற்கு மகளிர் சுய உதவி குழுக்களை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 1989ம் ஆண்டு தொடங்கினார். அன்று தர்மபுரியில் தொடங்கப்பட்ட இந்த சுய உதவி குழு, இன்று தமிழ்நாடு முழுவதும் 7,22,000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகிறது.
நான் யாருக்கு பரிசு அளிப்பதாக இருந்தாலும் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருட்களை தான் வழங்குவேன். எனக்கு பரிசுகள் வழங்குபவர்களிடமும் அந்த பொருட்களை வழங்க வேண்டும் என வேண்டுகோளை வைத்துள்ளேன். பெரிய நிறுவனங்கள் உருவாக்கும் பொருட்களின் மீது இருக்கும் நம்பிக்கையை விட மகளிர் சுய உதவி குழுக்கள் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.
திராவிட மாடல் அரசு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு எப்பொழுதும் துணை இருக்கும். மகளிர் சுய உதவி குழுக்கள் தற்போது கடன் உதவி பெரும் நிலையிலிருந்து பொருளாதாரத்தை உருவாக்குபவர்கள் என்கிற நிலையை அடைந்துள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களில் உருவாக்கும் பொருட்களை இ-காமர்ஸ் முறையில் சந்தைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
மூன்றாம் பாலினத்தவருக்கு தனி சுய உதவி குழுக்கள் தொடங்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கோரிக்கை வைத்துள்ளார். அது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து நல்ல முடிவு விரைவில் எடுக்கப்படும்” இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:
”பெரியார் 1929ம் ஆண்டு நமது முன்னேற்றம் என்கிற கட்டுரை எழுதினார். அதில் நம் நாட்டவருக்கும் மேலை நாட்டவருக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன என எழுதினார். குறிப்பாக பொருளாதாரத்தில் நாம் எந்த அளவு பின் தங்கி உள்ளோம் என வேதனையை அவர் பதிவு செய்துள்ளார். பெரியாரின் கொள்கையை சட்டமாக்கியவர் கருணாநிதி. அவர் மகளிர் சுய உதவி குழுவை உருவாக்கி மகளிர் மேம்பாட்டுக்கு வழி வகுத்தார். இந்த துறை உதயநிதிக்கு ஒப்படைக்கப்பட்ட பின் பல முன்னேற்றங்கள் நடந்தது.
வருங்கால தமிழ்நாட்டை வழி நடத்தும் தலைவராக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார். சமுதாய ஏற்றத்தாழ்வு கலையப்பட வேண்டும் என முதலமைச்சர் சிந்தித்து செயல்பட்டு வருகிறார். கருணாநிதி உருவாக்கிய மகளிர் சுய உதவி குழு திட்டத்தை அப்போது துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் விரிவுப்படுத்தினார். தற்போது உதயநிதி ஸ்டாலின் மேலும் அதை விரிவுப்படுத்துவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.” இவ்வாறு அன்பில் மகேஷ் கூறினார்.







