ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி இழக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜார்க்கண்ட் முதலமைச்சரான ஹேமந்த் சோரன், தனது பெயரில் ஒரு சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்ததாகக் கூறப்படுகிறது. இது மக்கள் பிரதிநிதி சட்டம் 9ஏ-ன்படி குற்றம் என்றும் எனவே அவரை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பாஜக மாநில ஆளுநரிடம் மனு அளித்தது.
அந்த மனுவை ஆளுநர், இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பிவைத்தார்.
மனுவை பரிசீலித்த தேர்தல் ஆணையம், ஹேமந்த் சோரனை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து அதற்கான பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ஹேமந்த் சோரன் தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும் என்றும் மாநிலத்தில் மீண்டும் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே வலியுறுத்தியுள்ளார்.
எனினும், ஆளுநரிடம் இருந்தோ அல்லது தேர்தல் ஆணையத்திடம் இருந்தோ தனக்கு எவ்வித தகவலும் வரவில்லை என ஹேமந்த் சோரன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் அனுப்பிய அறிக்கை என்பது சீலிடப்பட்டதாகத்தான் இருக்கும் என்றும், ஆளுநர் தற்போது டெல்லியில் உள்ள நிலையில், அந்த அறிக்கையில் என்ன உள்ளது என்பதை பாஜக எவ்வாறு அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சில பாஜக தலைவர்களும் அவர்களின் ஆதரவு பத்திரிகையாளர்கள் சிலரும் சேர்ந்து கொண்டு இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜார்க்கண்ட்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தங்கள் கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மை இருப்பதால் ஆட்சி மாற்றம் ஏற்படாது என தெரிவித்துள்ளது. ஹேமந்த் சோரன் முதலமைச்சராக நீடிக்க வேண்டும் என்பதுதான் காங்கிரசின் முடிவு என தெரிவித்துள்ள காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆலம்கிர் ஆலம், ஹேமந்த் சோரன் இடைத் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவும் முடியும் என கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் தகுதி நீக்க மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது இன்னும் வெளியாகாத நிலையில், இந்த விவகாரம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.








