#Bangladesh சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் முகமது யூனுஸ் பேச்சு!

வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்  பிரதமர் மோடியிடம் இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸ் தொலைபேசியில் நம்பிக்கை அளித்துள்ளார். வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத…

வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்  பிரதமர் மோடியிடம் இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸ் தொலைபேசியில் நம்பிக்கை அளித்துள்ளார்.

வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் நாளடைவில் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். நிலைமை மோசமானதை அடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இதனையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது ஷஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து, வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் ஆக. 8 அன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

வங்கதேச முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா வந்து தஞ்சமடைந்துள்ளார். அவருக்கு இந்தியா அடைக்கலம் அளித்துள்ளதாக கூறி வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக செய்திகள் வெளியானாதால் வங்கதேச எல்லையில் பல மக்கள் குவியத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இந்திய – வங்கதேச எல்லையை கண்காணிக்க மத்திய அரசு குழு ஒன்றையும் உருவாக்கியது. மேலும் சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் எனவும் மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் வங்கதேச இடைக்கால அரசின் அதிபரான முகம்மது யூனுஸ், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். வங்கதேசத்தில் நிலையான, அமைதியான சூழல் நிலவுவதற்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் உள்பட சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என முகமது யூனுஸ் உறுதியளித்துள்ளார். வங்க தேச அதிபருடனான தொலைபேசி உரையாடல் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.