சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரையாண்டு விடுமுறையின் போது தொடங்கிய இப்போராட்டம் பள்ளிகள் திறந்த பின்பும் தொடர்ந்தது. சென்னை டிபிஐ வளாகத்தில் 36 வது நாளாக இன்று போராட்டம் நடைபெற்றது.
இந்த சூழலில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் , மூவர் குழு அறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினை தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு, தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு திரும்பி, கற்பித்தல் பணிகளில் ஈடுபட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில் அமைச்சரின் அறிக்கையையடுத்து இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பு சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மாணவர்களின் கல்வி நலன், நெடு நாட்களாக போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் மூன்று நபர்கள் ஊதிய குழுவின் அறிக்கையை பெற்று எங்களது ஒற்றைக் கோரிக்கையை வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் நிறைவேற்றிட உதவுமாறு வேண்டுகிறோம். மேலும் இந்த போராட்ட நாட்களில் தொடுக்கப்பட்ட வழக்குகள், எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், ஆசிரியர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட ஊதியம் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து நமது ஆட்சியுடன் இடைநிலை ஆசிரியர்கள் என்றென்றும் தொடர்ந்து பயணிக்க எங்களுக்கு உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







