நாதக வேட்பாளர்கள் மிரட்டப்படுவதாக சீமான் குற்றச்சாட்டு

நாம் தமிழர் கட்சியின் 60க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மிரட்டப்பட்டுள்ளதாகவும், சில வேட்பாளர்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு…

நாம் தமிழர் கட்சியின் 60க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மிரட்டப்பட்டுள்ளதாகவும், சில வேட்பாளர்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு பிப்.19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகளின் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும், 200க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “அரை நூற்றாண்டு மாறி மாறி ஆட்சி அமைத்து அடிப்படை கட்டமைப்பு கூட செய்யாமல் உள்ளதால்தான் சென்னை மழை காலங்களில் தத்தளிக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என கொண்டுவருவதற்கு முன் ஒரே சுடுகாடு, ஒரே குளம் என கொண்டு வரவேண்டும்.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆளுநர் மாநில அரசுகளை ஆய்வு செய்வது முறையல்ல. ஆளுநர் மாநில அரசை நீதி ஆய்வு மேற்கொள்வது தவறு. இந்திய அரசை ஜனாதிபதி ஆய்வு மேற்கொண்டால் அனுமதிப்பார்களா? அரசு சரியாக திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்கிறதா என ஆளுநர் மேற்பார்வை செய்யலாம்.

அண்ணா கூறியதைப் போல ஆட்டுக்கு ஏன் தாடி, நாட்டுக்கு ஏன் ஆளுநர். நாமென்ன வீட்டு பாடமா எழுதித் தருகிறோம், அவர் திருத்தி நமக்கு மார்க் போடுவதற்கு. ஆளுநரின் வேலை ஒற்றர் வேலை” என்றும் சீமான் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை அறிவிக்கிறாரே தவிர, அதனை செயல்படுத்தவில்லை என விமர்சித்தார். மேலும் 60க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மிரட்டப்பட்டுள்ளதாகவும், சில வேட்பாளர்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் சீமான் குற்றம் சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.