”அறிவியலும் நம்பிக்கையும் வெவ்வேறானவை ; இரண்டையும் ஒன்றோடொன்று கலக்க வேண்டிய அவசியமில்லை” என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
நிலவை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணிக்கு அந்த விண்கலத்தில் இருந்து பிரிந்து விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கி சாதனை புரிந்தது.
நிலவின் தென் துருவத்திற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலமானது கடந்த 23-ந் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. நிலவின் தென் துருவத்தில் உலகில் முதல் நாடாக இந்தியா கால்பதித்துள்ளது. இதற்கு உலகின் பல நாட்டுத் தலைவர்கள் முதல் பிரபலங்கள் என பலர் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து, ரோவர் பத்திரமாக தரையிறங்கியது. ரோவர் பிரிந்து நிலவை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு நிலவின் மேற்பரப்பில் லேண்டர் விக்ரம் மற்றும் பிரக்யான் ரோவர் தரையிறங்கிய வீடியோவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது.
சந்திரயான் 3 தொடர்பான ஒவ்வொரு புதிய அப்டேட்களையும் இஸ்ரோ அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. லேண்டரில் இருந்து ரோவர் 8 மீட்டர் பயணித்ததாக இஸ்ரோ அண்மையில் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நிலவில் நகர்ந்து சென்று ரோவர் ஆய்வு செய்யும் வீடியோவை இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில், “பிரக்யான் ரோவர் தென் துருவத்தில் நிலவின் ரகசியங்களைத் தேடுவதற்காக ரோவர் இறங்கிய முனையைச் சுற்றித் திரிகிறது” என்ற அப்டேட்டுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டது.
வெளிநாட்டு பயணத்தை முடித்து கொண்டு இஸ்ரோ மையத்திற்கு வந்த பிரதமர் மோடி சந்திரயான் 3 திட்டத்தில் ஈடுபட்ட விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் பேசிய அவர் “சந்திரயான் 3 லேண்டர் நிலவில் கால் பதித்த அந்த நேரத்தில் நான் உணர்ந்த மகிழ்ச்சி அரிதானது. நான் ஒரு வித்தியாசமான மகிழ்ச்சியை உணர்கிறேன். இது போன்ற சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதானவை.
மெதுவாக தரையிறங்கும் தருணத்தில் மிகவும் அமைதியற்ற நிலையில் இருந்தேன். தென்னாப்பிரிக்காவில் இருந்தாலும், என் மனம் இந்தியாவில் தான் இருந்தது. உங்கள் அனைவருக்கும் நான் சல்யூட் செய்ய நினைத்தேன். நீங்கள் தேசத்தை எந்த அளவு உயரத்துக்கு அழைத்துச்சென்றுள்ளீர்கள் என்றால், இது சாதாரணமானது அல்ல. உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.
நீங்கள் ஒரு முழு தலைமுறையை எழுப்பி, அவர்கள் மீது ஆழமான முத்திரையை பதித்துள்ளீர்கள்.சில ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளித் துறை 8 பில்லியன் டாலரில் இருந்து 16 பில்லியன் டாலராக மாறும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சந்திரயான்-3 தரையிறங்கிய நிலவில் உள்ள இடம் இனி ‘சிவசக்தி என்று அழைக்கப்படும். இமயம் முதல் கன்னியாகுமரி வரை இந்தியர்களை இணைக்கின்ற பெயராக இது இருக்கும். இந்த சக்தி என்பது பெண்களின் சக்தியும் கூட. சந்திரயான்-3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமானது. எனவே சிவசக்தி என்ற பெயர் அவர்களின் அர்ப்பணிப்பிற்கும் ஒரு சாட்சி ‘சிவசக்தி’ வரவிருக்கும் தலைமுறையினரை மக்களின் நலனுக்காக அறிவியலை பயன்படுத்த ஊக்குவிக்கும். “மக்கள் நலமே எங்களின் உச்சக்கட்ட அர்ப்பணிப்பு. “ என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சிவசக்தி குறித்து விளக்கம் அளித்துள்ள இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளதாவது..
” சந்திராயன் -3 லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடத்தை பிரதமர் நரேந்திர மோடி ‘சிவசக்தி’ என அழைத்துள்ளார். பல்வேறு நாடுகள் நிலவில் தாங்கள் தரையிறங்கிய இடங்களுக்கு பெயர்கள் சூட்டிக்கொள்கின்றன, அதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு. அதனால் பிரதமர் மோடி அவ்வாறு அழைத்ததில் எந்த தவறும் இல்லை. அறிவியலும் நம்பிக்கையும் இரண்டு வெவ்வேறு நிறுவனங்கள், இரண்டையும் கலக்க வேண்டிய அவசியமில்லை” என தெரிவித்துள்ளார்.







