சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள உலக பல்கலைக்கழக உதவி மையத்தில் பல்கலைகழக ஆசிரியர் சங்கமான ஏயுடி-வின் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும், பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி பேசியதாவது: உங்களில் ஒருவனாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கனவே இந்த சங்கத்தின் வைர விழா, பொன்விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன். அதை உரிமையுடன்தான் இன்றும் கலந்து கொண்டுள்ளேன்.
1947-ல் இந்த சங்கம் தொடங்கப்பட்டது. 1987-ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று போராடிய போது சிறை சென்றேன். 1989-ல் நான் அமைச்சராக பொறுப்பேற்றேன், கலைஞர் பொறுப்பேற்ற பின் மத்திய அரசு ஊழியர்கள் ஊதியம் போல் மாநில அரசு ஊழியர்களுக்கும் மாற்றி அமைத்தார். நிதி நிலை சரி ஆகும் போது, வரும் காலங்களில் உங்களுக்கு தேவையானதை நிறைவேற்ற அரசு முயற்சி செய்யும்.
இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் உயர்கல்வி துறை எண்ணிக்கை உயர்ந்து உள்ளது, எண்ணிக்கையில் மட்டுமல்ல தரத்திலும் உயர வேண்டும். ஆசிரியர்களிடம் அன்பான கோரிக்கையை வைக்கிறேன். நாங்கள் என்னதான் திட்டம் கொண்டு வந்தாலும் அதனை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது உங்கள் கையில்தான் உள்ளது.
காமராஜர் காலத்தில் ஆரம்ப கல்வி உயர்ந்தது, கருணாநிதி காலத்தில் உயர்கல்வி உயர்ந்தது, இந்த ஆட்சியில் இந்தியாவின் பொற்காலமாக மாற்றப்பட வேண்டும் என்பதே முதலமைச்சரின் குறிக்கோள்.மேலும், நீங்கள் அனைவரும் ஒன்றாய் சேர வேண்டும். பல்கலைக்கழக ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைத்து கல்லூரி பேராசிரியர்களும் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்தமாக குரல் கொடுங்கள். இதுவே எனது அன்பான வேண்டுகோள். இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.
தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் 75 ஆவது விழா கருத்தரங்க மலரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெற்றுக் கொண்டார்.








