கருவில் இருப்பது ஆணா? பெண்ணா?: ஸ்கேன் மூலம் கண்டறிந்து கருக்கலைப்பு, 7 பேர் கைது

கருவில் இருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என கண்டறிய சோதனை செய்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் வனஜா…

கருவில் இருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என கண்டறிய சோதனை செய்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் வனஜா – ராகவன் தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வனஜா மூன்றாவது முறையாக கருவுற்றார். சமீபத்தில் வனஜா பேருந்தில் செல்லும்போது அவரது அருகே அமர்ந்திருந்த பெண், கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறிந்து சொல்ல தனக்கு தெரிந்த நண்பர்கள் உள்ளதாகவும் அவர்களிடம் தீர்வு கிடைக்கும் என கூறி திருப்பத்தூரை சேர்ந்த ஜோதி என்பவரின் தொடர்பு எண்ணை கொடுத்துள்ளார்.

அதன்படி, கடந்த 12ம் தேதி தருமபுரி சென்ற வனஜாவை ஆட்டோ ஓட்டுனரான வெங்கடேசன் என்பவரது வீட்டிற்கு காரில் அழைத்து சென்று கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறியும் நவீன மொபைல் ஸ்கேன் கருவி கொண்டு சோதனை செய்துள்ளனர். சோதனையில் பெண் குழந்தை என தெரிந்ததும் அதனை அழிக்க வனஜா ஜோதியிடம் சம்மதம் தெரிவித்துள்ளார். அதனையடுத்து கருகலைப்பு செய்ய ரூ.20,000 ஆகும் என தெரிவித்துள்ளனர்.

பின்னர் 14 ம் தேதி வனஜா பணத்துடன் வந்தார். அவருக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமலேயே கருச்சிதைவு பணி நடந்துள்ளது. கருவில் இருந்து குழந்தை வெளியே எடுக்கும் பொழுது சிசுவின் தலை பிறப்புறுப்பில் சிக்கி கொண்டதால் வனஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்து அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். கருக் கலைப்பு செய்த கும்பல் குழந்தையை அப்படியே வயிற்றிலேயே வைத்துவிட்டு அதனை வனஜாவிடம் மறைத்துவிட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வீட்டிற்கு சென்ற வனஜாவிற்கு அதிக வலி ஏற்பட்டதால் அவரை அவரது தாயார் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியதன் பேரில் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தருமபுரி மாவட்ட மருத்துவத்துறை ஊரக பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனிமொழி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தார். அப்போது, கருவுற்ற பெண்கள் 6 பேருக்கு ஸ்கேன் செய்வதற்கு வெங்கடேசன் வீட்டிற்கு நேற்று அழைத்து சென்றதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல்துறையினர் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஆட்டோ டிரைவர் வெங்கடேஷின் வீட்டில் 6 கர்ப்பிணி பெண்களை அழைத்து வந்து தாங்கள் டாக்டர்கள் என்று கூறி ஏமாற்றி கற்பகம் மூலம் ஸ்கேன் கருவி கொண்டு, கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்கிற தகவலை சொல்லப்பட்டது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து திருப்பத்தூரைச் சேர்ந்த ஜோதி, சதீஷ்குமார், சுதாகர், தருமபுரி மாவட்டம் அழகாபுரி பகுதியை சேர்ந்த கற்பகம், பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த சரிதா, பாரதிபுரம் பகுதியை சேர்ந்த குமார்,  ஆட்டோ ஓட்டுனர் வெங்கடேசன் ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஸ்கேன் பரிசோதனை கருவி, அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.