கர்நாடக மாநிலத்தின் 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள சாவர்க்கர் பற்றிய தகவலால் புதிய சர்ச்சைகள் உருவெடுத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மாநில பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் அண்மையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதில், 8ஆம் வகுப்புக்கான கன்னட பாடப்புத்தகத்தில் விநாயகர் தாமோதர் சாவக்கர் பற்றிய புதிய பகுதி இணைக்கப்பட்டிருந்தது. அந்தப் பாடப் புத்தகத்தில் வி.டி.சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்தபோது சிறைக்கு வந்த பறவையின் மீதேறி தன் தாய்நாட்டை தரிசிக்க செல்வார் என்று குறிப்பிடப்பட்டிக்கிறது.
குறிப்பிட்ட அந்த வாக்கியத்தில் , “சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறையில் ஒரு சாவித் துவாரம் கூட இல்லை. ஆனால், அந்த அறைக்கு அன்றாடம் புல்புல் பறவைகள் வந்து செல்லும். சாவர்க்கர் அந்த புல்புல் பறவையில் இறகுகளில் ஏறி ஒவ்வொருநாளும் தன் தாய்நாட்டை தரிசித்து வருவார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாக்கியம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உண்மைக்குப் புறம்பானதை மாணவர்களுக்குக் கூறி வரலாற்றைத் திரிப்பதா என்று எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன.
ஆனால், புத்தக வடிவமைப்புக் குழுவில் உள்ளோர் இந்த சர்ச்சையை முற்றிலும் மறுத்துள்ளனர். இது குறித்து புத்தக வடிவமைப்பு குழுவின் தலைவர் ரோஹித் சக்ரதீர்த்தா கூறுகையில், “இந்த பத்தியில் உள்ள வரிகள் அழகிய புலமை நயமிக்கவை.
இந்தப் புலமை நயத்தை சிலரால் புரிந்துகொண்டு ரசிக்கத் தகுந்த அளவில் அறிவாற்றல் இல்லையே என்பது அதிசயமாக இருக்கிறது” எனக் கூறியிருக்கிறார். `பறவை மீது ஏறிப் பறந்தார்’ என்பதை அப்படியே பொருள்கொள்ளாமல் புலமை நயத்துடன் பார்க்க வேண்டும் என புத்தக வடிவமைப்புக் குழு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா








