சாத்தான்குளம் வழக்கு: அடுத்தகட்ட விசாரணை ஜூன் -24 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் -24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை-மகன் ஜெயராஜ் – பென்னிக்கிஸ்…

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் -24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை-மகன் ஜெயராஜ் – பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து இருவரும் உயிரிழந்தனர். விசாரணையின்போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்ததாகப் புகார் எழுந்தது.

இருவரும் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த புகாரின்பேரில் தொடரடப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகளுக்கு விசாரணையின்போது மொழி பெயர்ப்பாளராக இருந்த தூத்துக்குடியை சேர்ந்த நல்ஆயன் காது கேளாதோர் பள்ளி ஆசிரியர் சுப்ரமணியனிடம் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜூன் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.