அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுகள் மறைந்து அக்கட்சி நிச்சயம் ஒன்றுபடும் என சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிமுக தனது வரலாற்றில் முதல் முறையாக சந்தித்த தேர்தலான திண்டுக்கல் மக்களவைத் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரும், இரட்டை இலை சின்னத்தை தேர்ந்தெடுத்தவருமான மாயத்தேவர் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிமுக வரலாற்றில் மறக்கமுடியாத நபர்களில் ஒருவரான மாயத்தேவரின் உடல் அடக்கம் திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில் இன்று மாலை நடைபெற உள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாயத்தேவர் இல்லத்தில் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் குவிந்துள்ளனர்.
இந்நிலையில் மாயத்தேவர் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சசிகலா இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். பின்னர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, மாயத் தேவர் அதிமுக வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ளதை நினைவு கூர்ந்தார். அதிமுகவின் முதல் வெற்றிக்கு சொந்தக்காரர் மாயத் தேவர் என்றும் சசிகலா தெரிவித்தார்.
அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இந்த பிளவுகள் அனைத்தும் விரைவில் மறைந்து அதிமுக நிச்சயம் ஒன்றுபடும் என்றார். சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வென்று தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமையும் என்றும் சசிகலா நம்பிக்கை தெரிவித்தார்.