சானியா மிர்சா – சோயிப் மாலிக் விவாகரத்து?

நட்சத்திர தம்பதியான சானியா மிர்சா – சோயிப் மாலிக் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற உள்ளதாக தகவல் பரவி வருகிறது.  நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, கடந்த 2010ம் ஆண்டு…

நட்சத்திர தம்பதியான சானியா மிர்சா – சோயிப் மாலிக் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற உள்ளதாக தகவல் பரவி வருகிறது. 

நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை கரம் பிடித்தார். இந்தியரான இவர், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ததற்கு அப்போது ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சானியா மிர்சாவின் நாட்டுப்பற்றும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இதனால், சானியா – சோயப்பின் திருமணம் அந்த சமயத்தில் பேசுபொருளானது. திருமணத்திற்கு பிறகு துபாயில் குடியேறிய சானியா மிர்சா, இந்தியா சார்பில் தொடர்ந்து டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வந்தார். தற்போது அவருக்கு 4 வயதில் இஷான் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில், சானியாவுக்கும், சோயிப்பிற்கும் இடையே அண்மைக் காலமாகவே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாகவும், விரைவில் விவாகரத்து பெற வாய்ப்புள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பலரும், பல யூகங்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது, இந்த யூகங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளன, சானியாவின் அண்மை கால இன்ஸ்டாகிராம் பதிவுகள். ”உடைந்த மனங்கள் எங்கே செல்கின்றன? – அல்லாவை காண”. இதுதான், சானியா மிர்சா பதிவிட்ட லேட்டஸ்ட் போஸ்ட். சோயிப் மாலிக் உடனான மனக்கசப்பு காரணமாகவே இதனை அவர் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமன்றி, அண்மையில் தனது மகன் இஷானின் பிறந்த நாளின்போதும் சானியா இதேபோன்ற பதிவொன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ”எனது வாழ்க்கையின் மிக மோசமான நேரங்களில் என்னுடைய மகன்தான் எனக்கான ஒரே ஆறுதல்” என அவர் உருக்கமாக தெரிவித்திருந்தார். அதேபோல், தனது மகனுடனான வேறொரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த அவர், ”இந்த தருணங்கள் என்னை மிகவும் கடினமான நாட்களுக்கு இழுத்துச் சென்றன” எனவும் குறிப்பிட்டிருந்தார். இப்படி, சானியா மிர்சாவின் ஒவ்வொரு பதிவும், அவரது திருமண வாழ்க்கை குறித்த வதந்திகளை வலுப்படுத்தும் விதமாகவே இருந்து வருகின்றன.

கடந்த மாத இறுதியில் சானியாவும் சோயிப்பும் தங்கள் மகனின் பிறந்தநாளை ஒன்றாக இணைந்து கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்களை, சோயிப் மாலிக் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சானியா மிர்சாவின் படம் இடம்பெற்றுள்ளது. ஆனால், தனது கணவர் உடனான எந்த புகைப்படத்தையும் சானியா மிர்சா அண்மைக்காலமாக பொதுவெளியில் பகிரவில்லை.

இத்தகைய காரணங்களை சுட்டிக்காட்டி, சானியாவும் சோயிப்பும் விவாகரத்து செய்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. மறுபுறம், சானியாவின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இருந்தபோதும், விவாகரத்து முடிவு குறித்து சானியாவிடம் இருந்தோ, சோயிப் மாலிக்கிடம் இருந்தோ, எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது இந்த விவகாரம் முக்கிய பேசுப்பொருளாகி உள்ள நிலையில், சானியா விரைவில் இது குறித்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.