சனாதன விவகாரம் – தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகத்தில் என்ன இருக்கு தெரியுமா? சுட்டிக்காட்டி அண்ணாமலை விமர்சனம்!

தமிழ்நாடு அரசின் 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் சனாதன தர்மம் மற்றும் இந்து மதம் ஒன்று தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கும், சேகர்பாபுவுக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.…

தமிழ்நாடு அரசின் 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் சனாதன தர்மம் மற்றும் இந்து மதம் ஒன்று தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கும், சேகர்பாபுவுக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.

செப்டம்பர் 2ம் தேதி தமுஎகச சார்பில் சென்னையில் “சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “ இந்த மாநாட்டிற்கு சனாதன எதிர்ப்பு மாநாடு என்று பெயர் வைக்கவில்லை.

சனாதன ஒழிப்பு மாநாடு என மிகச் சரியாக வைத்துள்ளீர்கள்.  சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதுதான் சிறந்தது. எப்படி டெங்கு, மலேரியா மற்றும் கோவிட் போன்றவற்றையும் ஒழித்துள்ளோமோ அதே போல சாதி மற்றும் ஏற்றத் தாழ்வுககளை ஊக்குவிக்கும் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்” என பேசியிருந்தார்.

இதற்கு நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கடும் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து வட மாநிலங்களில் பல்வேறு கருத்துகள் உலாவுவதால் கடும் எதிர்வினைகள் அங்கிருந்து வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டை பொறுத்தவரை இயக்குனர் வெற்றிமாறன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் பேசி 10 நாட்கள் கடந்தும் அது குறித்த எதிர்வினைகள் ஓய்ந்தபாடில்லை. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசின் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் டூ) பாட புத்தகத்தில் பக்கம் 58-இல், “இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. `சனாதன தருமம்` என்றால் `அழிவில்லாத நிலையான அறம்` எனப்படும்,” என்று பாடம் இடம்பெற்று இருக்கிறது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இது தற்போது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில், 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் சனாதன தர்மம் குறித்த தகவல் இடம்பெற்றிருப்பது குறித்து பா.ஜ.க. தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து எக்ஸ் பதிவில் கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, “சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பி.கே. சேகர் பாபு, தொடர்ச்சியாக எழுந்த கண்டனங்களை தொடர்ந்து இந்து மதமும், சனாதனமும் வெவ்வேறானது என்று தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் சனாதன தர்மம் மற்றும் இந்து மதம் ஒன்று தான் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த வகுப்பில் சேர்ந்து கொண்டு அறிவாளியாகும் படி நாங்கள் பி.கே. சேகர் பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறோம்,” என்று குறிப்பிட்டு உள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.