சமந்தா, விஜய் தேவகொண்டா நடிக்கும் குஷி பட ஷூட்டிங்கின்போது விபத்து ஏற்பட்டதாக பரவிய செய்தியை படக்குழு மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘குஷி’ திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘குஷி’ திரைப்படத்தை இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்குகிறார்.
‘குஷி’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
‘குஷி’ உற்சாகமான.. வண்ணமயமான.. காதல் கதையாக இருக்கும் என்பதை அண்மையில் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் உறுதிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. காஷ்மீரில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஷூட்டிங்கை முடித்து தற்போது ஐதராபாத் திரும்பியுள்ளது படக்குழு.
இதற்கிடையே, படப்பிடிப்பின்போது கார் விபத்து ஏற்பட்டதில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்த தகவல் உண்மையானது இல்லை. காஷ்மீரில் 30 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்று ஒட்டுமொத்த படக்குழுவும் ஹைதராபாத் திரும்பியுள்ளனர். இரண்டாவது ஷெட்யூல் விரைவில் தொடங்கவுள்ளது. வதந்திகளை தயவு செய்து நம்ப வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








