என்னை உருவாக்கிய எனது பள்ளிக்கு வணக்கம் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு இம்மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். இதனையொட்டி அவரின் மலரும் நினைவுகளை வீடியோ வாயிலாக பகிர்ந்துள்ளார். தான் படித்த பள்ளி முன் நின்று பழைய நினைவுகள் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது:
“இந்த அரசு உயர்நிலைப் பள்ளி விளங்கோடு குழித்துறையில் உள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள வகுப்பில் தான் படித்தேன். முன்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பள்ளியாக இருந்தது. சுமார் 2500 மாணவர்கள் படித்தோம். எப்போதும் கலகலப்பாக இருக்கும். எங்கள் தலைமையாசிரியர் மிகவும் கண்டிப்பானவர். இந்த பள்ளி தான் என்னை தமிழ்நாடு காவல்துறையின் தலைமை பதவிக்கு அழைத்துச்சென்றது. இந்த பள்ளிக்கு மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளேன். பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், இங்கு வருகிறேன். இந்த பள்ளியை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வந்துள்ளேன். தாய் மண்ணே வணக்கம் என்பதை போல் என் பள்ளியே வணக்கம். என் பள்ளிக்கு வணக்கம், இந்த பள்ளிதான் 700 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சென்னைக்கு அழைத்துச் சென்று தமிழ்நாடு காவல்துறை டிஜிபி என்ற உயர்ந்த பொறுப்பில் அமர வைத்தது. நன்றி”. என சைலேந்திபாபு வீடியோவில் தெரிவித்துள்ளார்.







