எகிப்திலிருந்து நாடு திரும்பிய பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுவடையும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு எகிப்து சென்றடைந்த பிரதமர் மோடிக்கு நேற்று கெய்ரோ விமான நிலையத்தில் ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கெய்ரோவில் உள்ள 1000 ஆண்டு பழமையான அல் ஹக்கீம் மசூதியை பிரதமர் மோடி பார்வையிட்டார். 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, இந்தியாவைச் சேர்ந்த தாவூதி போரா சமூகத்தினரால் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த மசூதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படம், பொருட்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட பிரதமர் மோடிக்கு பின்னர் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து முதலாம் உலக போரில் போரிட்டு, உயிர் தியாகம் செய்த 4000 இந்திய வீரர்களுக்காக அமைக்கப்பட்ட ஹீலியோபோலிஸ் போர் கல்லறைக்கு பிரதமர் மோடி நேரில் சென்றார். போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் எகிப்து அதிபர் அப்தல் பட்டா எல் சிசியை சந்தித்து பேசினார். இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்திய நிலையில், இருநாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.
இதனைத் தொடர்ந்து, எகிப்து நாட்டின் உயரிய அரசு விருதான “ஆர்டர் ஆப் தி நைல்” விருதை பிரதமர் மோடிக்கு, அதிபர் அப்தல் பட்டா எல் சிசி வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் கிசா பெரிய பிரமிட்டை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார். இயேசு கிறிஸ்து பிறப்புக்கு முந்தைய காலத்தில் 26ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும் கிசா பிரமிடுகள் குறித்த தகவல்களை பிரதமர் மோடி கேட்டறிந்தார். பின்னர் எகிப்து பிரதமர் முஸ்தபா மாத்பாலியுடன் சேர்ந்த பிரமிடு முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பிரதமர் மோடி எகிப்து பயணத்தை முடித்துக்கொண்டு நள்ளிரவு டெல்லி வந்தடைந்தார். பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, எம்.பி.க்கள் உள்ளிட்டோர் டெல்லி விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றனர்.
https://twitter.com/narendramodi/status/1672963932091453441?s=20
எகிப்து பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்தது என பிரதமர் மோடி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்த பயணம் மூலம் இந்திய- எகிப்து உறவு மேலும் பலப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.









