ஹைதராபாத்தில் இருந்து கூரியர் சர்வீஸ் மூலம் கஞ்சா வரவழைத்து அதனை விற்பனை செய்து வந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வடமாநிலங்களில் இருந்து பெருமளவு கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ரயில் மூலம் மற்றும் பார்சலில் கஞ்சா அனுப்பப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் தனியார் கூரியர் சர்வீஸ் மூலமாகவும் கஞ்சா வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக ரகசியம் கசிந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, நண்பர்களுக்கிடையே இன்ஸ்டாகிராம் மூலமாக தகவல் கொடுத்து அதன் மூலம் கஞ்சா அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்தது. பின்னர் விசாரணை நடத்தி ராஜாக்கமங்கலம் பகுதியில் 3 இளைஞர்கள் கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஆசாரிபள்ளத்தை சேர்ந்த ஜெரிஸ் (வயது 24) எறும்புகாடையை சேர்ந்த வினோத் (வயது 28), மேலராமன்புதூரை சேர்ந்த பிரிஜின் பிரகாஷ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் மூன்று பேரும் இன்ஸ்டாகிராம் மூலமாக ஹைதராபாத்துக்கு நண்பர்களுடன் தொடர்பு கொண்டு கஞ்சாவை கூரியர் சர்வீஸ் மூலமாக வாங்கி, விற்பனை செய்துவந்துள்ளனர். இளைஞர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி நாகர்கோவில் பீச் ரோடு சந்திப்பில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் போலீசார் சோதனை நடத்தி, பார்சலில் வந்த 300 கிராம் எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்கள் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் பொறியியல் பட்டதாரி என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் கஞ்சாவை எடை போடும் இயந்திரம், செல்போன் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
படித்த இளைஞர் உதவியுடன் நூதன முறையில் கஞ்சா விற்பனை அரங்கேறியுள்ளது, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
– இரா.நம்பிராஜன்