திருச்சி அருகே குளிர்சாதன பெட்டியில் சமைத்து வைத்திருந்த நூடுல்ஸ் உணவை சாப்பிட்ட 2 வயது சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி ஊராட்சியில், சாய் தருண் என்ற 2 வயது சிறுவன் நேற்று திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தான். உடனே மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் புட் பாய்சன் ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்திருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
முதல் நாள் சாய் தருணின் தாய் நூடுல்ஸ் உணவு சமைத்து கொடுத்துள்ளார். பின்னர் அதை குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி மீண்டும் காலையில் அதனை சூடுபடுத்தி சாய் தருணுக்கு கொடுத்துள்ளார். இதை சாப்பிட்ட பிறகு தான் சாய் தருண் சோர்வாகவே காணப்பட்டுள்ளான். பின்னர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஒவ்வாமை காரணமாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட உணவை கொடுத்ததால் சிறுவன் இறந்திருக்கலாம் என்று மருத்துவர்களும் தெரிவித்ததால், இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் தகவலறிந்து, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குழு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையின் உடல்நிலை ஏற்கனவே பாதிக்கப்பட்டு சிகிச்சை ஏதும் எடுத்துக் கொண்டுள்ளாரா ? நூடுல்ஸ் உணவை குழந்தையின் தாயார் எப்போது சமைத்தார் மற்றும் எந்த அளவிற்கு உணவு கெட்டு போய் இருக்க வாய்ப்பு இருந்திருக்கும் போன்ற பல்வேறு கோணங்களில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– இரா.நம்பிராஜன்







