நாடு மத சகிப்புத்தன்மையுடன்தான் இருக்கிறது: சத்குரு ஜக்கி வாசுதேவ்

நமது நாடு மத சகிப்புத்தன்மையுடன்தான் இருக்கிறது என்றும் அவ்வாறு இல்லை என கூறுவது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்றும் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள நேர்காணலில், நாட்டில் உள்ள…

நமது நாடு மத சகிப்புத்தன்மையுடன்தான் இருக்கிறது என்றும் அவ்வாறு இல்லை என கூறுவது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்றும் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள நேர்காணலில், நாட்டில் உள்ள அனைத்து சமூகமுமே கல்வி, வேலைவாய்ப்பு, தரமான வாழ்க்கை இதற்கே முன்னுரிமை அளித்து வருவதாகக் குறிப்பிட்டார். வீடுகளில்கூட சண்டை சச்சரவு இருப்பதை மக்கள் விரும்பவில்லை என அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு மிகுந்த மதிப்பு அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த சத்குரு ஜக்கி வாசுதேவ், ஆனால், சில சுயநல சக்திகள் வேண்டுமென்றே நாட்டில் மதச்சார்பின்மைக்கு ஆபத்து வந்துவிட்டதாகக் கூறுவதாக விமர்சித்தார்.

முன் எப்போதையும்விட தற்போது நமது நாடு மதச்சார்பின்மைக்கு மிகுந்த முக்கியத்துவும் அளித்து வருவதாக அவர் கூறினார்.

தனது கல்லூரி காலங்களில் நாட்டில் அடிக்கடி மதக் கலவரங்கள் நடந்ததாகத் தெரிவித்த சத்குரு ஜக்கி வாசுதேவ், அது வாடிக்கையானதுதான் என மக்களும்கூட கருதி வந்ததாகக் கூறினார். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் குறிப்பிடும்படி எங்கும் அதுபோன்ற மதக் கலவரங்கள் நிகழவில்லை என்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதோடு, தொலைக்காட்சி அரங்கங்களில் மிகைப்படுத்தப்பட்ட முறையில் விவாதங்கள் நடத்தப்படுவதாகவும், நாட்டில் கலவரச்சூழல் இருப்பதுபோன்று தொலைக்காட்சிகள்தான் சித்தரிப்பதாகவும் ஆனால் உண்மை அதுவல்ல என்றும் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.