“பெருமையால் தம்மை ஒப்பார்
பேணலால் எம்மை ஒப்பார்
ஒருமையால் உலகை வெல்லார்
ஊனம் மேல் ஒன்றும் இல்லார்
அருமையாய் நிலையில் நின்றார்
அன்பினால் இன்பம் ஆழ்வார்
இருமையும் கடந்து நின்றார்
இவரை – நீ அடைவாய்”
தம் அடியார்களின் அருமை பெருமைகளைச் சிவனே கூறியதாக சொல்லப்படும் பாடலிது. சிவ பதத்தை அடைய விரும்பும் அடியவர்கள், பகவானுக்கு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட வழியில்,தொண்டுகள் செய்து , இறைபதம் அடைய ஆதங்கம் கொள்வர். அப்படி திருஉருத்திரத்தை இடையறாது உச்சரித்தும், வேதத்தின் இதயம் போன்ற சிவபஞ்சாட்சரத்தை ஜெபித்தும் , இறை அன்பிற்குப் பாத்திரமான நாயனாரின் கதையிது.
அவர் சோழ நாட்டில்,. திருத்தலையூர் என்ற வேள்வித் தீயினால் மழை பெய்ய, நறுமணம் நிறைந்த சோலைகளைக் கொண்டு, பசுக்கூட்டங்கள் பஞ்ச கவ்யத்தை பொழிய, தருமமும், நீதியும், அமைதியும் தவழும் தலத்தைச் சேர்ந்தவர், பசுபதியார் என்னும் திருநாமம் உடையவர். வேதத்தில் விளங்கும் உருத்திர மந்திரத்தினை,உள்ளன்போடு ஓதி “உருத்திர பசுபதி நாயனார்” என்று அழைக்கப்பட்டார். “வேத புருஷர் ஒருவர்க்கு இந்த ருத்ரம் கண்ணும், இதனுள் இருக்கும் பஞ்சாட்சரம் கண்மணி” என சதுர்வேதி தாற்பர்ய சங்கிரத்தில் காண்க என்பர்.
“எம்பெருமானுடைய பெருமையைச் சொல்லும் இம்மந்திரமே வேதத்தின் மெய்ப்பொருள்” என்பது சேக்கிழார் வாக்கு. தமது மரபிற்கேற்ப, வேதம், சாத்திரம், இதிகாச, புராணங்களில் சிறந்த புலமை பெற்றிருந்தார். “ருத்” என்றால் துன்பம், “திரன்” என்றால் தீர்ப்பவன்.
சிவனுக்கேற்ற சிவமந்திரமிதுவே எனக் கொண்டு, மனதாலும், வாக்காலும், மெய்யாலும், அங்கு இருந்த தாமரைத் தடாகத்திலிறங்கி, கழுத்தளவு உள்ள குளிர்ந்த நீரில் நின்று கொண்டு , மனமுருகி, சிவபிரானின் திருவடிகளை மனத்தில் கொண்டு, இரு கை களையும் தலைக்கு மேல் குவித்துக் கொண்டு, அருமைப் பயனாகிய உருத்திர மந்திரத்தை ஓதுவார். இதனை முறைப்படி,இரவும்,பகலும் இடைவிடாமல் ஓதியதில் ஒன்றிடுவார். 
“நீடும் அன்பினில் உருத்ரம்
ஓதிய நிலையால்
ஆரு சேவடி அருகுற
அணைந்தன ரவர்க்குப்
பாடு பெற்ற சீர் உருத்திர
பசுபதி யா ரா ங்
கூடு நாமமும் நிகழ்ந்தது
குவலயம் போற்ற”
என்பதைப் போல, இவரின் தவம் பெருமை, மந்திரநியதியின் அளவு மிகுந்து நிற்றலையும் கண்டு, சிவன் திரு உள்ளம் மகிழ்ந்து, திருவருள் புரிய, அதன் விளைவாக, பசுபதி யார், தீதில்லா நிலையுள்ள சிவபுரி எல்லையில் சேர்ந்து இறைவனது நிழலில் இனிதமர்ந்தார். 
இவரது குருபூஜை புரட்டாசி மாதம், அஸ்வினி நட்சத்திரத்தில் சிறப்பாக நடைபெறும். நமது தேசத்து பெரும்பாலான புராணங்கள், வடமொழி நூல்களை மூலமாகக் கொண்டவை. ஆனால் பெரியபுராணம் மட்டும் தமிழ் மொழியில் மலர்ந்துப் பின் வடமொழி மற்றும் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது.
- சுப்பிரமணியன்







