கர்நாடகா தோல்வியை மறைக்கும் தந்திரமே ரூ.2000 நோட்டை திரும்பப்பெறும் அறிவிப்பு – கே.எஸ்.அழகிரி

கர்நாடகா தேர்தல் தோல்வியை மறைக்கவே 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32ஆவது நினைவு தினம் இன்று…

கர்நாடகா தேர்தல் தோல்வியை மறைக்கவே 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32ஆவது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டவர்களும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல் தமிழகத்திலும், ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தி, நினைவு தின உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி, பிரதமர் மோடி துக்ளக் தர்பார் ஆட்சி செய்து வருகிறார். ஆட்சியில் இல்லாத போது தலைவர்களை கொன்றதை போலவே, ஆட்சிக்கு வந்த பிறகு நல்ல கொள்கைகளை கொன்று வருகிறார். எந்த ஒரு திட்டங்களும் அறிவிப்புகளும் பொது மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்காமல் மீண்டும் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்திருப்பது கர்நாடக தேர்தல் தோல்வியை மறைப்பதற்காக செய்வது போன்று உள்ளது என்று கூறினார். மேலும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு மாடல் உள்ளது. திமுகவின் நல்ல செயல் திட்டங்களை காங்கிரஸ் என்றுமே ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.