மத்திய பிரதேசத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் காந்திலால் பூரியா தேர்தல் பிரசாரத்தில் , “2 மனைவிகள் உள்ளவர்களுக்கு ரூ.2 லட்சம்” என கூறியது தற்போது சர்ச்சையாகி உள்ளது.
இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 4ம் கட்ட வாக்குப்பதிவு மே 13-ம் தேதியும் (நாளை) , 5ம் கட்ட வாக்குப்பதிவு மே 20-ம் தேதியும், 6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதியும், 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மக்களவை தேர்தலில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை நியாயப்பத்திரம் எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பெண்களுக்காக மஹாலஷ்மி யோஜ்னா எனும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : “கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை குறிப்பிட்டு பேசிய மத்திய பிரதேச மாநிலம் ரத்லாம் தொகுதி வேட்பாளர் காந்தி லால் புரியா “எங்கள் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை இரண்டு மனைவிகள் வைத்திருப்போருக்கு ரூ.2 லட்சமாகக் கிடைக்கும். ஏனெனில், அதில் இருவருமே இந்த திட்டத்தில் பலனடைவார்கள்” எனப் பேசினார்
அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் , இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜகவினர் இது குறித்து தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளனர். 4ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (மே13) நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் இந்த சர்ச்சைக்குறிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








